அரசின் சிக்கன நடவடிக்கை : அமைச்சரவையின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
- June 2, 2020
- jananesan
- : 1064
- VMSMustafa
அரசின் சிக்கன நடவடிக்கை மேற்க்கொள்ள அமைச்சரவையின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வீரியமடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கி நிதிச்சுமை உருவாகி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து தொழில்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் ஓட்டல் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துறைகளில் சுமார் 5 சதவிதம் சரிவு காணப்பட்டாலே, இந்தியாவின் மொத்த வளர்ச்சி சுமார் 1 சதவிதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 2 சதவிகிதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது கொரோனாவின் வீரியத்தை பொறுத்து, மேலும் சரிவை சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவின் 80 சதவிதம் நிறுவனங்கள், பணபுழக்கம் இல்லாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவின் தாக்கம் வீரியமடையாத நிலையில், அதன் தாக்கம் தற்போதே 53 சதவித நிறுவனங்களில் தெரிவதாக FICCI அமைப்பு கூறியுள்ளது.
ரசாயன துறையை பொறுத்தவரை, ஜீன்ஸ்க்கு போடும் சாயம் தொடங்கி, மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் வரை சீனாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக உள்நாட்டில் ரசாயன தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு சுமார் 80 முதல் 90 சதவிதம் வரை சரக்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைவிட்டு போகும் நிலை உருவாகியுள்ளது.
2020ம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்கான வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு குறையும் என்பதில் நிபுணர்களிடையே எந்த மாற்று கருத்தும் இல்லை. இப்படி இருக்க கூடிய நிலையில், இனி வரும் காலங்கள் மேலும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசும் வருவாயின்றி தவித்து வருவதன் காரணமாக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசுஅதிகாரிகள் விமானத்தில் செல்ல தடை, விழாக்கள் கட்டுப்பாடு, புதிய அரசு பணி நியமனம் என பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த வகையில் தமிழக அமைச்சரவையில் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்தால், பல கோடி ரூபாய் தமிழக அரசு வருவாய் மிச்சம் ஏற்படும், அவர்களுக்கு பயன்படுத்தப்படும் கார்கள், வழங்கப்பட்டுள்ள வீடு, பாதுகாப்பு அதிகாரிகள், மின்சாரம், தொலைபேசி, சம்பளம் என பல வகையிலும் அரசுக்கு மிச்சம் ஏற்படும் இதன் மூலம் வருவாய் மிச்சமும் அரசுக்கு ஏற்படும் ஆகவே ஆக்கபூர்வமான நடவடிக்கையை தமிழக முதல்வர் சிந்தித்து மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Leave your comments here...