கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் விற்பனை தொடங்கியது..!

தமிழகம்

கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் விற்பனை தொடங்கியது..!

கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் விற்பனை தொடங்கியது..!

சென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தை வழியே கொரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், அதனை தடுக்கும் வகையில் சந்தை மூடப்பட்டது. இதனால், சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணியும் துரிதமாக நடந்தது.கோயம்பேடு சந்தை மூடப்பட்டதின் விளைவாக பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து நிறுத்தப்பட்டது.


இதனால் ஏற்கனவே மொத்த வியாபாரிகள் கையாளுகையில் இருந்த சரக்குகளே விற்பனை ஆனது.சரக்கு வண்டிகளில் வரும் காய்கறியையும் சில்லறை வியாபாரிகள் மொத்தமாக வாரிச்சுருட்டி வாங்கி கொள்கிறார்கள். மேலும் 2-ம் தர வியாபாரிகளும் அதிகளவு ஆர்வம் காட்டுவதால் நகரத்து கடைகளில் காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேவேளையில் கிடைக்கும் காய்கறியும் ‘கிடுகிடு’வென விலை உயர்ந்து மக்களை மலைக்க செய்தது.

கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயர்ந்து விற்கப்பட்ட நிலையில், சென்னையை அடுத்த திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது.ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட லாரிகளில் 6 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளன.இந்த சந்தையில் 4 பிரிவுகளாக கடைகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, ஏ பிரிவில் 58 கடைகள், பி பிரிவில் 31 கடைகள், சி பிரிவில் 60 கடைகள், டி பிரிவில் 51 கடைகள் என விற்பனை நடந்து வருகிறது.கடந்த வார இறுதியில், விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் இன்று விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கோயம்பேடு சந்தையை போலவே, திருமழிசைக்கும் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave your comments here...