ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்: 83 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள்

தமிழகம்

ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்: 83 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள்

ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்:  83 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள்

சென்னை தரமணியில் டிட்கோ மற்றும் டி.எல்.எப் நிறுவனம் இணைந்து ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 27 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான (டவுன் டவுன்) வளாகம் அமைக் கப்படுகிறது. இதில் 20 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்து விளக்கு ஏற்றி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பேசிய  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி :- நாட்டின் தொழில் வளர்ச்சியில் இன்னொரு மைல்கல்லாக டிட்கோ மற்றும் டி.எல்.எப். நிறுவனம் இணைந்து உருவாக்கவிருக்கும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான DLF Down Town Chennai வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அம்மாவின் அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால் பல புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து தொழில் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.  இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்ற ஒரே ஆண்டில் 59 திட்டங்கள் தங்கள் வணிக உற்பத்தியைத் துவக்கியுள்ளன.  மேலும், 213 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.    வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு, இதுவரை 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளை பெறவும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன் வரும் வெளிநாடு வாழ் தமிழ்  மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கவும், “யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை நானே நேரடியாகச் சென்று அமெரிக்காவில் துவக்கி வைத்தேன். இந்தப் பயணத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும், துபாயிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, அதன் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன.  இதனால் 35 ஆயிரத்து 520க்கு மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.  மேற்படி ஒப்பந்தங்களில் 5 நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் ஒற்றைச் சாளர அனுமதிகளை நேரடியாகக் கண்காணித்து விரைவுபடுத்திட, எனது தலைமையில் ஒரு  உயர்மட்டக்  குழு அமைக்கப்பட்டுள்ளது.   இக்குழுவின் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 36 தொழில் திட்டங்களுக்கு பல்வேறு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.  22 ஆயிரத்து 763 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாக்கப்பட உள்ளன.  மேலும், முதலீடு செய்வதை எளிதாக்குதல் பிரிவு, எனது அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பு மற்றும் வானூர்தி தொழில் பூங்கா, மின்சார வாகனப் பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

Start-Up எனும் தொழில்களை ஊக்குவிக்க தனிக் கொள்கை, தகவல் தொழில்நுட்பக் கொள்கை, வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை என  தொழில் துறை மேம்பட பல்வேறு கொள்கைகளை வகுத்து, திட்டங்களை செயல்படுத்தி அம்மாவின் அரசு வெற்றி கண்டு வருகிறது. குவைத் நாட்டைச் சார்ந்த அல் கராபி என்ற நிறுவனம் தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த BS – SIX பெட்ரோலியப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நவீன பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி தொழிற்சாலையை துவக்க உள்ளது.  இதன் மூலம், சிங்கப்பூர் நாட்டின் ஜுராங்க் தீவு, குஜராத்தில் உள்ள ஜாம் நகர் மற்றும் தஹேஜ் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியைப் போல, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களும் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். இது தவிர, உலகின் மிகப் பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான BYD, மாபெரும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விங்டெக் ஆகிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தங்களது புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளன. தொழில் சிக்கல்கள் காரணமாக மூடப்பட்ட நோக்கியா நிறுவன தொழிற்சாலையினை வாங்கி, மின்னணு சாதன உற்பத்தியினை மேற்கொள்ள சால்காம் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது. இவ்வாறு, முந்தைய காலங்களில் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் நின்ற தொழில் நிறுவனங்கள் கூட, தற்போது என்னுடைய அரசின் தொடர் முயற்சிகளால் புத்துயிர் பெறும் சிறப்பான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்த அரசின் நல்லாட்சிக்கு ஒரு அத்தாட்சியாக வேளாண்மை, தொழில், மனித வள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நல திட்டங்கள் உள்ளிட்ட பத்து துறைகளில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஐம்பது குறியீடுகளின் அடிப்படையில், 2019-க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் சென்னை என்று கூறுகின்ற அளவிற்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன.  மற்ற நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களை சென்னையில் தொடங்க விரும்புகின்றன.   எனவே பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்  தங்களுடைய தொழில்நுட்ப அலுவலகங்களை சென்னையில் அமைப்பதற்கு வசதியாக மற்றொரு பெரிய வளாகம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.  இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில்   டிட்கோவும், டி.எல்.எப். நிறுவனமும் கூட்டாக இணைந்து சென்னை, தரமணியில் 27.04 ஏக்கர் நிலப் பரப்பில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தகவல்  தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கான, பல்வேறு நவீன வசதிகளுடன் ஒரு வளாகத்தினை அமைக்க உள்ளது.  இதன் மூலம் 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்க வாய்ப்பு உள்ளது.

தொழில் முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசு அம்மாவின் அரசு.  அவர்கள் தொழில் தொடங்க அனுமதி மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் குறுகிய காலத்தில் வழங்குவதும் அம்மாவின் அரசுதான்.  இதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயரும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், டிட்கோ நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா, டி.எல்.எப். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோகித் குஜ்ரால், நிறுவனத்தின் மேலாண்மை இயக் குனர் ஸ்ரீராம் கட்டார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Leave your comments here...