பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு..!!

அரசியல்

பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு..!!

பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜெ.பி.நட்டா  தேர்வு..!!

கடந்த 2014ம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்பு, பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டார். இவர் தலைமையில் பாஜக.   அடுத்தடுத்து பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று, பிரதமராக மோடி 2வது முறை பொறுப்பேற்றதும் தனது அமைச்சரவையில் 2வது இடமான   உள்துறை அமைச்சர் பதவியை அமித்ஷாவுக்கு வழங்கினார்.

இந்நிலையில், பாஜகவின் கட்சி விதிகளின்படி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவரது பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் முடிவடையவிருந்ததால்,   அதுவரை அவர் தொடரலாம் என அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையே, பாஜகவில் புதிதாக செயல்தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார்.

தேசிய தலைவரானார் ஜே.பி.நட்டா..!

நாடு முழுதும், பாஜகவின், உட்கட்சித் தேர்தல்கள், பல மாதங்களாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கும், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான தலைவர், பொதுச் செயலர் உட்பட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகளை, மூத்த தலைவர் ராதா மோகன்சிங் தலைமையிலான குழு, மேற்பார்வையிட்டு வருகிறது.

டில்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில், தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. இதில் செயல் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா மட்டுமே மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும், இப்போதைய தலைவருமான அமித்ஷா ஆகியோர் முன்னிலையில், தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இன்றே தலைவராக பொறுப்பேற்று, பணிகளை கவனிக்க உள்ளார். புதிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

யார் இந்த ஜே.பி.நட்டா..?

இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஜே.பி.நட்டா, அந்த மாநில சட்டசபைக்கு 1993, 1998   தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்பின், ராஜ்யசபாவுக்கு தேர்வானார். கடந்த முறை பிரதமர் மோடி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது அமைச்சர் பதவியில் இல்லாத அவருக்கு கட்சியின் தேசிய தலைவர் பதவி கிடைத்துள்ளது. பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா ஆகிய இருவராலும் விரும்பப்படுபவர், எந்த வித சர்ச்சையிலும் சிக்காதவர் என்பது ஜே.பி.நட்டாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

 

Leave your comments here...