டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வந்த 40 பேருக்கு மீண்டும் எழுத்து தேர்வு

சமூக நலன்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வந்த 40 பேருக்கு மீண்டும் எழுத்து தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வந்த 40 பேருக்கு மீண்டும் எழுத்து தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் குரூப்-4 பணியிடங்களுக்கு தான் அதிகம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் தொகுதி-4ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 9 ஆயிரத்து 300 காலி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 மையங்களில் நடந்தது.

இந்த தேர்வு முடிவை நவம்பர் மாதம் 12-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டது. தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்ற 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. தேர்வாணையம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் மொத்த தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றவர்களில் 40 பேர் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியிருப்பவர்களாக உள்ளனர் என்று தேர்வர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், அந்த 40 பேர்தான் இடஒதுக்கீடு தரவரிசை பட்டியலிலும், மாநில அளவில் முதல் 5 இடங்களை பெற்றவர்களின் பட்டியலிலும் இருக்கின்றனர் என்றும் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் நடந்த தேர்வுகளில் இந்த 2 தேர்வு மையங்களில் எழுதியவர்கள் மட்டும் தரவரிசை பட்டியலில் அடுத்தடுத்து நல்ல மதிப்பெண் பெற்றது எப்படி? என்ற கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் 40 இடங்களில் இடம்பெற்றவர்களில் பலர் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களை புறக்கணித்து ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி சந்தேகம் ஏற்படுவதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
இந்த முறைகேடு புகார்கள் குறித்து டி.என்.பி. எஸ்.சி தனது விசாரணையை தொடங்கியுள்ளது. வெளிமாவட்ட தேர்வர்கள் எத்தனை பேர் ராமநாதபுரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. வெற்றி பெற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் சரிபார்க்கப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்தது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், செயலாளர் நந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள் ஐந்தரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். 40 பேரின் சான்றிதழ்கள், விடைத்தாள்கள், தேர்வுக்கு தயாரான விதம், தேர்வு மையமாக ராமநாதபுரத்தை தேர்வு செய்தது ஏன்? ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டீர்களா?, எத்தனை ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வருகிறீர்கள்? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக விசாரணையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.  அவர்களிடம் அறிவியல், பொதுத்தேர்வு, கணிதம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும், இந்த விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களிடம் பேசக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 57 பேரையும் விசாரித்த பின்னரே தேர்வில் முறைகேடு ஏதும் நடைபெற்றுள்ளதா? எத்தனை பேர் முறைகேட்டில் ஈடுபட்டனர்? என்ற விவரங்கள் முழுமையாக தெரியவரும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...