சிஏஏ-வின் மூலம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கமுடியாது.. சம உரிமை கிடைக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

இந்தியா

சிஏஏ-வின் மூலம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கமுடியாது.. சம உரிமை கிடைக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

சிஏஏ-வின் மூலம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கமுடியாது.. சம உரிமை கிடைக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

“சிஏஏ-வின் மூலம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கமுடியாது அதனால் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்கள் அச்சப்படத் தேவையில்லை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் துன்புறுத்தலுக்கு உள்ளான அகதிகள், மோடி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும், அவர்களும் இந்தியாவின் குடிமக்களாக முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கம் தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அமித் ஷா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தற்போது வரை கணக்கில் வராமல் நிறைய பேர் இருக்கிறார்கள். இங்கே பரப்பப்படும் தவறான பிரச்சாரத்தால், நிறைய பேர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவே தயங்குகிறார்கள். அவர்கள் அனைவரும் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், மோடி தலைமையிலான அரசு உங்களுக்கு குடியுரிமை வழங்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன். நீங்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்திருந்தாலும் உங்கள் மீது வழக்கு பதியப்படாது. யாரும் அச்சப்படத் தேவையில்லை. அனைவருக்கும் சமமான உரிமை உண்டு. நீங்களும் இந்தியாவின் குடிமக்களாக்கப்படுவீர்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது ஆப்கானிஸ்தான்,வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி அகதிகளுக்கு உரிமை மற்றும் குடியுரிமை வழங்க மட்டுமே. சிஏஏவின் கீழ் குடியுரிமை பெறுவர்களுக்கு உங்களுக்கும் எனக்கும் உள்ள அனைத்து குடிமக்களுக்கான உரிமைகளும் வழங்கப்படும். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு எம்பி, எம்எல்ஏக்களாகவும் வரலாம்.

கடந்த 1947, ஆக.15 முதல் 2014, டிச.31 வரையில் இந்தியாவுக்குள் நுழைந்த அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரை இவர்கள் 85 சதவீத மக்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்கள். ஆவணங்கள் இல்லாதவர்களுக்காகவும் நாங்கள் தீர்வு காண இருக்கிறோம். அரசியல் சாசன விதிகளின் படி, முஸ்லிம்களும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உரிமையுள்ளது.

சிஏஏ குறித்து பல்வேறு இடங்களில் நான் ஒரு 41 தடவையாவது பேசியிருப்பேன். சிஏஏ-வின் மூலம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கமுடியாது அதனால் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று நான் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கியுள்ளேன்.

2014 டிச.31 க்கு முன்பாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்குள் வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு சிஏஏ வழிவகை செய்கிறது. இதன்மூலம் அந்த அகதிகளின் துன்பம் முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது.

கடந்த 1947, ஆக.15ம் தேதி நமது நாடு பிரிவினைக்குள்ளானது. இது மூன்றாக பிரிக்கப்பட்டது. இதுதான் பின்னணி. பாரதிய ஜன சங்கம் மற்றும் பாரதிய. ஜனதா கட்சி பிரிவினைக்கு எதிரானது. மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாடு பிரிவினைக்குள்ளான போது மதரீதியிலான சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். சிறுபான்மை பிரிவு பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்தார்கள்.

அகதிகளாக வந்த அவர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. பிரிவினையின் போது பேசிய காங்கிரஸ் தலைவர்கள் கூட, பாதிக்கப்பட்டவர்கள் அந்தப்பகுதியிலேயே இருக்க வேண்டும், பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றனர். தற்போது அவர்கள் வாக்கு வங்கி மற்றும் சமரச அரசியலை செய்யத் தொடங்கியுள்ளனர்.

அகண்ட பாரதத்தின் ஒரு பிரிவாக இருந்தவர்களுக்கு, மதத்துன்புறுத்தலுக்கு உள்ளானர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது நமது தார்மீக மற்றும் அரசியலமைப்பின் பொறுப்பு. நீங்கள் புள்ளி விபரங்களை உற்றுநோக்கினால் ஒன்று புரியும், நாடு பிரிவினையைச் சந்தித்த போது பாகிஸ்தானில் 23 சதவீதம் இந்துக்களும், சீக்கியர்களும் இருந்தார்கள், தற்போது அவர்கள் வெறும் 3.7 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் என்னவானார்கள்? இந்தியாவுக்கு அவர்கள் திரும்பவில்லை.

அவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள், துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள், இரண்டாம் தர குடியுரிமை வழங்கப்பட்டு அவமானத்துக்குள்ளானர்கள். அவர்கள் எங்கே போவார்கள்? இந்த நாடும், நாடாளுமன்றமும், இங்குள்ள அரசியல் கட்சிகளும் அவர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? ” இவ்வாறு உள்துறை அமைச்சர் பேசினார்.

மார்ச் 11ம் தேதி நாட்டில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குடியுரிமைத் திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படுதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. பாகிஸ்தான், ஆப்கன், வங்கசேத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டத்தினைக் கொண்டுவந்தது.

Leave your comments here...