அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்..! இச்சட்டம் சொல்வது என்ன..?

இந்தியா

அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்..! இச்சட்டம் சொல்வது என்ன..?

அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்..! இச்சட்டம் சொல்வது என்ன..?

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதனை, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இன்றும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இருப்பினும், இன்னும் முறையான சட்ட விதிகள் வகுக்கப்படாததால் நடைமுறைப்படுத்தாமலிருக்கும் இந்த குடியுரிமை திருத்த சட்டம், மக்களவைத் தேர்தலுக்குள் கொண்டுவரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக, மத்திய அரசு, அரசாணை வெளியிட்டிருக்கிறது

அதன்படி விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

சட்டம் சொல்வது என்ன?

கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதாவது ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

இந்த சட்டம் மூலம் மத துன்புறுத்தல் காரணமாக அந்த நாடுகளில் இருந்தோர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால், இந்தியாவுக்கு வந்தவர்கள் 5+ 1 என்று 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். அதாவது தொடர்ச்சியாக கடந்த ஒரு வருடமும், கடந்த 14 வருடங்களில் குறைந்தது ஐந்து வருடங்களும் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும். இதற்கு முன்பு புலம்பெயர்ந்தோர் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக இருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்ற விதி இருந்தது. அதை இந்த புதிய சட்டத்தில் குறைத்து இருந்தனர்.

அதேநேரம் அசாமின் கர்பி ஆங்லாங், மேகாலயாவின் கரோ மலைகள், மிசோரமில் உள்ள சக்மா மாவட்டம் மற்றும் திரிபுராவில் உள்ள பழங்குடியினர் பகுதிகள் உட்பட, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் உள்ள அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகளில் இருந்து இந்தச் சட்டம் விலக்கு அளிக்கிறது.

Leave your comments here...