தொடர் போராட்டம் எதிரொலி.. மராத்தா சமூகத்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு – மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா

தொடர் போராட்டம் எதிரொலி.. மராத்தா சமூகத்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு – மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்

தொடர் போராட்டம் எதிரொலி.. மராத்தா சமூகத்தவர்களுக்கு  10% இட ஒதுக்கீடு – மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மகாராஷ்டிராவில் விவசாயிகள், கொல்லர், தச்சர் உள்ளிட்ட 96 சாதிகளைச் சேர்ந்தவர்கள் மராத்தா சமூகத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இம்மாநிலத்தில் 28% உள்ளனர். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தாங்கள் பின்தங்கி இருப்பாகவும், எனவே, தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். சமீபத்தில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மனோஜ் ஜாரங்கி பாடில், மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மராத்தா சமூகத்தின் நிலை குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி சுனில் சுக்ரி தலைமையிலான மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிக்கையை அரசுக்கு வழங்கியது. 9 நாட்களில் 2.5 கோடி குடும்பங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த 2017லும் இதேபோன்ற ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான அப்போதைய அரசு, அதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, மராத்தா சமூகத்தின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி எம்ஜி கெய்க்வாட், 2028 நவம்பரில் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. அதில், மராத்தா சமூகம் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மகாராஷ்டிர மாநில சமூக பொருளாதார பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சட்டம் 2018 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தற்போது, மராத்தா சமூகத்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதனை சட்டமாக்கும் நோக்கில் இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடியுள்ளது. இதில், இது குறித்து விவாதித்து, சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...