சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவு – இன்று மாலை உடல் தகனம்..!

தமிழகம்

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவு – இன்று மாலை உடல் தகனம்..!

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவு –  இன்று  மாலை உடல் தகனம்..!

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. 45 வயதான வெற்றி துரைசாமி தனது தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வந்தார். பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

வெற்றி தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபிநாத்துடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். சென்னை திரும்புவதற்காக இமாச்சலபிரதேசத்தின் சட்லஜ் ஆற்றின் அருகே மலைப்பாங்கான பகுதியில் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இரு தினங்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

உள்ளூரை சேர்ந்த வாடகை காரை தஞ்சின் என்கிற டிரைவர் ஓட்டிச் சென்றார். கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார். காரில் பயணம் செய்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்.காரில் சீட் பெல்ட் அணிந்திருந்த டிரைவரும், கோபிநாத்தும் காருடன் இருந்த இருந்த நிலையில் சீட் பெல்ட் அணியாத வெற்றி துரைசாமி,கார் ஆற்றுக்குள் கவிழ்ந்தபோது வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டை நடைபெற்ற பின்னர் வெற்றி துரைசாமி குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அம்மாநில காவல்துறை தெரிவித்தது.

இத்தகவல் அறிந்து தந்தை சைதை துரைசாமி அங்கு சென்றார். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகே காட்டுப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிப்பதாகவும் அவர்களிடம் தகவல் தெரிவிக்குமாறு இமாச்சல் காவல்துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சைதை துரைசாமி கூறினார்.

மேலும், மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்’ எனவும் சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.எட்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கார் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பாறைக்கடியில் இருந்து வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது. பனி படர்ந்த சட்லெஜ் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள மயானத்தில் வெற்றியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெற்றி துரைசாமி உடலை கண்டறிந்து மீட்டுக்கொடுத்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடி அளிக்கப்படும் என சைதை துரைசாமி தெரிவித்ததாக இமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, வெற்றி துரைசாமியின் உடலை கண்டறியும் தேடுதல் படையின் தலைமை அதிகாரியாக இருந்த அமித் குமார் ஷர்மா ஐபிஎஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...