அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி..!

அரசியல்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி..!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தக் கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதிமுக ஆட்சி காலத்தில் 2011 – 2015-ம் ஆண்டு காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தப்போது போக்குவரத்துக்கழகத்தில் பணி வாங்கி தருவதாக பணம் பெற்ற வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கடந்த மே மாதம் உத்தரவிட்டது.இதையடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை, 2023-ம் ஆண்டு மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் ஜூன் 13ம் தேதி 5 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அமாலக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு வரும் பிப்.14-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்கவில்லை. இதையடுத்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்து தமிழக அரசு நிர்வாக ஆணை வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது. தார்மீக அடிப்படையிலும் சரியானது அல்ல. சிறந்த ஆட்சிக்கும், நிர்வாக தூய்மைக்கும் இது உகந்தது அல்ல. எனவே, அமைச்சரவையில் அவர் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக முதல்வருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதம், ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Leave your comments here...