பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ராஜினாமா.. பாஜகவுடன் மீண்டும் கைகோர்ப்பு – உடைந்தது இந்தியா கூட்டணி..!

அரசியல்

பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ராஜினாமா.. பாஜகவுடன் மீண்டும் கைகோர்ப்பு – உடைந்தது இந்தியா கூட்டணி..!

பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ராஜினாமா.. பாஜகவுடன் மீண்டும் கைகோர்ப்பு –  உடைந்தது இந்தியா கூட்டணி..!

இன்று காலை ஆளுநரைச் சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், நண்பகலில் மீண்டும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிஹார் முதல்வர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். இண்டியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இண்டியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்” என தெரிவித்தார்.

இதனிடையே, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாம்ராட் சவுத்ரி, “என் வாழ்வில் வரலாற்றுத் தருணத்தை பாஜக ஏற்படுத்தி இருக்கிறது. கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், அரசில் பங்கு வகிக்க இருப்பதும் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2020ல் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கானது. லாலு யாதவின் பயங்கரவாதத்துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிஹாரில் காட்டாட்சி இருக்ககூடாது. அதற்கு முடிவு கட்ட வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் முன்மொழிந்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது” என கூறினார்.

இதனையடுத்துப் பேசிய கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக இருந்து தற்போது துணைத் தலைவராக மாறி இருக்கும் விஜய் குமார் சின்ஹா, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் மீண்டும் ஆளுநரை நிதிஷ் குமார் சந்தித்தார். அவருடன், சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா தலைவர்கள், ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆகியோரும் சென்று ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏக்களின் கையொப்பம் அடங்கிய மனுவை ஆளுநரிடம் அளித்து, தனக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார். முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வர்களாக சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹாவும் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Leave your comments here...