செய்தியாளர் நேச பிரபு மீதான தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழகம்

செய்தியாளர் நேச பிரபு மீதான தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

செய்தியாளர் நேச பிரபு மீதான தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

திருப்பூர் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் நேச பிரபு. தனியார் செய்தித் தொலைக்காட்சியின் பல்லடம் மற்றும் சூலூர் பகுதி செய்தியாளராக செயல்பட்டு வந்த நிலையில் அவர் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக செய்தியாளர் நேச பிரபு, போலீஸில் புகார் அளித்தார். இது குறித்து நேச பிரபு, போலீஸார் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோவில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என செய்தியாளர் நேச பிரபு பேசியுள்ளது

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: “திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்வு மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...