பொன்முடிக்கு சிறை தண்டனை – அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது – அண்ணாமலை!

அரசியல்

பொன்முடிக்கு சிறை தண்டனை – அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது – அண்ணாமலை!

பொன்முடிக்கு சிறை தண்டனை – அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது – அண்ணாமலை!

தி.மு.க மூத்த நிர்வாகியான பொன்முடி மீது 2 சொத்து குவிப்பு வழக்குகள் உள்ளன. அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1.75 கோடி சொத்து குவிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2017- ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என அறிவித்தார். மேலும், தண்டனை விவரம் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் ”மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில்,  அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்திருப்பது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை: கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து அப்பீல் செய்யப்பட்டு கடைசியாக தீர்ப்பு வந்துள்ளது. கொஞ்சம் தாமதமாக வந்தாலும் நல்ல தீர்ப்பு. தமிழக பா.ஜனதா சார்பில் வரவேற்கிறோம்.இதன்மூலம் ஊழல் இல்லாத சமுதாயத்தை படைப்பதற்கு இந்த தீர்ப்பு படிக்கல்லாக அமையும்.

ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக புழல் ஜெயிலில் இருக்கிறார். இந்தியாவே பார்த்து கொண்டிருக்கிறது. இப்போது தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார்.

இதே பட்டியலில் இன்னும் சில அமைச்சர்கள் இருக்கிறார்கள். இது ஆரம்பம்தான். அடுத்த ஆண்டு மத்தியில் இன்னும் சிலருக்கும் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த தீர்ப்பை பொறுத்தவரை தனிப்பட்ட மனிதரின் பாதிப்பு ஆகாது. தி.மு.க.வின் அரசியலையே புரட்டி போடும் தீர்ப்பு இது. நீதிமன்றத்தையும் ஆளும் கட்சியையும் சம்பந்தப்படுத்தி பேசுபவர்கள் அரசியலில் இருக்கவே லாயக்கில்லாதவர்கள். பா.ஜனதாவில் சேருபவர்கள் மட்டும் விமோசனம் அடைவதாக கூறுவது தங்கள் மீதான பிரச்சினைகளை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்குத்தான்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...