இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி செய்து தலைமறைவான பாதிரியார் கோர்ட்டில் சரணடைந்தார்: சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு..!

தமிழகம்

இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி செய்து தலைமறைவான பாதிரியார் கோர்ட்டில் சரணடைந்தார்: சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு..!

இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி செய்து தலைமறைவான பாதிரியார் கோர்ட்டில் சரணடைந்தார்: சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு..!

வேலூரை குடியாத்தம் பகுதியை சேரந்த யோபுசரவணன் என்ற ஜோப்சரவணன் (வயது 49). இவர் தன்னை பாதிரியார் எனவும், தொண்டு அறக்கட்டளையின் தலைவராக உள்ளதாகவும் கூறி வந்துள்ளார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு தனக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் வருவதாகவும், அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாகவும், அதற்காக வீடு கட்டித்தர டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisements

இதனை நம்பி குடியாத்தத்தை சேர்ந்த பலர் டெபாசிட் தொகையாக லட்சக்கணக்கில் பணத்தை பாதிரியார் யோபுசரவணனிடம் கொடுத்துள்ளனர். இதனை கண்ட குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்த ராஜேந்திரன், நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த தயாளன் ஆகியோர், அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் வீடு கட்டித்தருவதாக கூறி பலரிடம் பணத்தை வசூலித்து கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் ₹4 லட்சத்தை யோபு சரவணனிடம் கொடுத்துள்ளனர். ஆனால், யோபு சரவணன் வீடு கட்டி தராமல் காலம் கடத்தியுள்ளார். இதையடுத்து பணத்தை திருப்பிக்கேட்டபோது 2006ம் ஆண்டு யோபு சரவணன் ₹4 லட்சத்திற்கான காசோலையை ராஜேந்திரன், தயாளனிடம் கொடுத்தார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது.

இதனையடுத்து குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்த ராஜேந்திரன், நடுப்பேட்டை காந்திரோடை சேர்ந்த தயாளன் ஆகியோர் யோபுசரவணன் மீது ரூ.4 லட்சம் செக் மோசடி செய்து விட்டதாக ஒரு வழக்கையும், குடியாத்தம் பிச்சனூர் குப்பன்னசெட்டி தெருவை சேர்ந்த பாண்டியன், ஆணைகட்டி கணபதி தெருவை சேர்ந்த வாசு, ஆனந்தன் ஆகியோர் யோபுசரவணன் மீது ரூ.4 லட்சம் செக் மோசடி செய்து விட்டதாக ஒரு வழக்கையும் குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 2007-ம் ஆண்டு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இறுதிவிசாரணை கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு செல்லபாண்டியன் வழங்கிய தீர்ப்பில் ராஜேந்திரன், தயாளன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் யோபுசரவணனுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமாக காசோலையின் 2 மடங்கு தொகையான ரூ.8 லட்சத்தை புகார்தாரர்களுக்கு அளிக்க உத்தரவிட்டார். அதேபோல் பாண்டியன், வாசு, ஆனந்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் யோபுசரவணனுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமாக காசோலையின் 2 மடங்கு தொகையான ரூ.8 லட்சத்தை புகார்தாரர்களுக்கு அளிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்து தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்த பாதிரியார் யோபுசரவணன் நேற்று குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார். அப்போது அவர் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி செல்லபாண்டியன், பாதிரியார் யோபுசரவணனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அவர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Leave your comments here...