லியோ’ பட சிறப்பு காட்சி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

சினிமா துளிகள்

லியோ’ பட சிறப்பு காட்சி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

லியோ’ பட சிறப்பு காட்சி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என திரையரங்குகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘லியோ’ திரைப்படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் 9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டப்படி ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையில் 45 நிமிடம் இடைவெளி விடவேண்டும் மற்றும் படத்தில் 20 நிமிட இடைவேளை விட வேண்டும் இந்த நேரத்தினை கூட்டும் போது 18 மணி நேரத்திற்கு மேலாகிறது. 9 மணிக்கு காட்சிகளை துவங்கி 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்றால் 5 காட்சிகளை திரையிட முடியாது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அரசு தரப்பில் 4 மணி காட்சிகளுக்கு எந்த படத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி குறிக்கிட்டு 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளீர்கள் அதை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார். 20 நிமிட இடைவெளி விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை தொடர்ந்து காட்சிகளை ஒளிப்பரப்பலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 9 மணிக்கு காட்சிகளை துவங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி அதை மீற முடியாது. இடைவேளை நேரத்தை குறைத்துக் கொள்கிறோம் என படத்தயாரிப்பு நிறுவனம் கூற முடியாது அதை திரையரங்கு நிர்வாகம் தான் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.7 மணி காட்சிக்கு அனுமதியில்லை என்றால் ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு ஏன் அனுமதியளிக்கிறீர்கள். அதனால் தான் சிறப்பு காட்சிகளுக்கு அவர்கள் அனுமதி கேட்கிறார்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்கள்.

மேலும், பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது, அதன் அடிப்படையில் விலக்கு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பை பொறுத்தவரை சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் விலக்கு அளிக்கப்படும் மற்ற நாட்களில் விலக்கு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி 9 மணி காட்சியை 7 மணிக்கு துவங்க தயாரிப்பு நிறுவனம், அரசிடம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பத்தை அரசு பரிசீலனை செய்து இன்று மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், காலை 4 மணி காட்சிகளை பொறுத்த வரை அரசு உத்தரவில் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

Leave your comments here...