ஆபாச படங்களை நீக்குவதில் தாமதம் – ஃபேஸ்புக் மீது கேரள காவல் துறை கிரிமினல் வழக்குப் பதிவு

இந்தியா

ஆபாச படங்களை நீக்குவதில் தாமதம் – ஃபேஸ்புக் மீது கேரள காவல் துறை கிரிமினல் வழக்குப் பதிவு

ஆபாச படங்களை நீக்குவதில் தாமதம் – ஃபேஸ்புக் மீது கேரள காவல் துறை கிரிமினல் வழக்குப் பதிவு

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச படங்களை நீக்க தாமதித்த காரணத்துக்காக, அந்தத் தளத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது கேரள மாநில காவல் துறை.

பெண் மனநல மருத்துவர் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஹேக்கர்களால் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. அதை நீக்குமாறு எழுத்துபூர்வமாக கேரள காவல் துறை, மெட்டாவிடம் தெரிவித்துள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அந்நிறுவனத்தின் மீது தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல் துறை. இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் இந்திய நோடல் அதிகாரியை கைது செய்யும் நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் ஃபேஸ்புக் பக்கம் மட்டுமே ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரது ப்ரொஃபைல் ஹேக் செய்யப்படவில்லை. ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்ட காரணத்தால் அதில் பகிரப்பட்ட ஆபாச படங்களை சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளால் நீக்க முடியவில்லை எனத் தெரிகிறது. அதையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் ஃபேஸ்புக் தளத்தை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனத்துக்கு காவல் துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இந்த வேலையை செய்த ஹேக்கரை அடையாளம் காணவும், அந்தப் பக்கத்தில் பகிரப்பட்ட படங்களை நீக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சட்டத்துக்கு உட்பட்டு நோட்டீஸ் பெறப்பட்ட 36 மணி நேரத்துக்குள் ஃபேஸ்புக் தளத்தில் இருந்து அந்தப் படங்களை நீக்க வேண்டும். ஆனால், ஒரு வாரம் கடந்தும் ஃபேஸ்புக்கில் அந்தப் படங்கள் நீக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்தே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற வழக்குகளில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் ஃபேஸ்புக்கின் அமெரிக்க தலைமையகத்துக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது இரு நாட்டு ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும். அனைத்து சைபர் குற்றங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதால் போலீஸாருக்கு இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave your comments here...