கோவை விமான நிலையத்தில் தரமற்ற ரன்வே – ஆணையத்திடம் ஒப்பந்ததாரர்கள் முறையீடு

தமிழகம்

கோவை விமான நிலையத்தில் தரமற்ற ரன்வே – ஆணையத்திடம் ஒப்பந்ததாரர்கள் முறையீடு

கோவை விமான நிலையத்தில் தரமற்ற ரன்வே – ஆணையத்திடம் ஒப்பந்ததாரர்கள் முறையீடு

கோவை விமான நிலையத்தில் ‘ரன்வே’ தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.கோவை சர்வதேச விமான நிலைய ஓடுபாதையை சீரமைக்க, இந்திய விமான நிலைய ஆணையம், 46.32 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரியது.

கடந்த 2022 மார்ச்சில் டெண்டர் கோரப்பட்டு, ஒன்பது நிறுவனங்கள் பங்கேற்றன. உத்தேச மதிப்பை விட 27 சதவீதம் குறைவாக, 33 கோடியே 80 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு கோரிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஓடுபாதை தரக்குறைவாக அமைக்கப்பட்டுள்ளதாக தென் மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம், ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் ஆகியவை, சி.பி.ஐ., மற்றும் விமான நிலைய ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்ற நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் கூறியதாவது:ஓடுபாதை சீரமைப்புபணியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தார்க்கலவைக்கு ‘பேட்சிங் பிளான்ட்’ அமைக்க வேண்டும். இதன் மதிப்பு மட்டுமே 10 கோடி ரூபாய். ஆனால், ஒப்பந்ததாரர், உள்ளாட்சிகளில் சாலை போட பயன்படுத்தும் சாதாரணமான ‘டிரம் மிக்ஸ் பிளான்ட்’ அமைத்துள்ளார்.

இது 40 லட்சம் ரூபாய்தான்.’பேட்சிங் பிளான்ட்’டைப் பொறுத்தவரை, ஜல்லி, டஸ்ட், தார் எந்தெந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு, செறிவான தார்க்கலவையைத் தரும். குவாரி டஸ்ட் அதிகமாக இருந்தால்தான், தார்ச்சாலையில், துளைகள் வராது. டஸ்ட் அந்த இடத்தை நிரப்பி, தரமாக இருக்கும். நீண்ட காலத்துக்கு உறுதியாக இருக்கும். ‘டிரம் மிக்ஸ் பிளான்ட்’டில், வெறும் ஜல்லியைக் கொட்டினாலும் கலவை வரும். ‘பேட்சிங் பிளான்ட்’ அமைக்காமலேயே பணி நடந்துள்ளது.

இதை அதிகாரிகள் அனுமதித்ததும் பெரும் முறைகேடு. தாரையும் மிச்சப்படுத்தியுள்ளனர்.இதனால், விமான ஓடுதளத்தின் தரம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. சூலுார் விமானதளம் போன்ற பகுதிகளில், ஓடுபாதை அமைக்கும்போது, ராணுவ பொறியியல் சேவைகள் (எம்.இ.எஸ்.,) அமைப்பு இப்பணிகளை மேற்பார்வை செய்யும். அப்போது, குறைந்தது 2 ‘பேட்சிங் பிளான்ட்’ அமைக்க வேண்டும். அந்த அளவுக்கு தரத்தை எதிர்பார்ப்பார்கள்.

கோவை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தரமற்ற ஓடுபாதையால், விமானங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.எனவே, இப்பணியை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, சி.பி.ஐ., மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவனிடம் கேட்டபோது, “இந்த புகாரின் நகல் எங்களுக்கும் வரப்பெற்றுள்ளது. ஒப்பந்தம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் விமான நிலைய ஆணைய தலைமை அலுவலகம்தான் மேற்பார்வை செய்கிறது. எனவே, இப்புகார் குறித்தும் தலைமை அலுவலகம்தான் உரிய நடவடிக்கை எடுக்கும்,” என்றார்.

Leave your comments here...