பத்திரப்பதிவுத் துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் – அண்ணாமலை குற்றச்சாட்டு

அரசியல்

பத்திரப்பதிவுத் துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் – அண்ணாமலை குற்றச்சாட்டு

பத்திரப்பதிவுத் துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் – அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் நடைபெற்று வருகிறது” என மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் 2-வது நாளாக இன்று யாத்திரை நடத்தினர். காலையில் நரசிங்கம் கோயிலில் இருந்து ஒத்தக்கடை வரை பாத யாத்திரை நடத்தினார்.

பின்னர் ஒத்தக்கடையில் அவர் பேசியதாவது: “தமிழகத்தில் நடந்து வரும் தவறுகளுக்கு மதுரை கிழக்கு தொகுதியில் நடைபெறும் ஊழல்கள் உதாரணமாக உள்ளது. இந்த தொகுதி எம்எல்ஏயும், அமைச்சருமான மூர்த்தி செய்யாத தவறே இல்லை. பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித்துறையில் இடமாறுதல், இடமாறுதலை ரத்து செய்தல், பணியிடை நீக்கம், பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய லஞ்சம் பெறப்படுகிறது.


பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறையில் விஞ்ஞான ரீதியில் ஊழல் நடைபெறுகிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. அமைச்சர் மூர்த்தி மகனின் திருமணத்துக்கு செய்த செலவில் சில கோடி ரூபாயை வழங்கியிருந்தால் சர்க்கரை ஆலையை இயக்கியிருக்கலாம். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கருணாநிதி குடும்பம் முதல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரை தானும், தன் குடும்பத்தினர் மட்டுமே நல்லாயிருக்க வேண்டும் என்பதே திமுகவில் உள்ள பிரச்சினை. தமிழகத்தில் மிகவும் மோசமான ஆட்சி நடைபெறுகிறது. அதை அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. கடந்த 9 ஆண்டு மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு மட்டும் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு திட்டங்களை வழங்கியுள்ளது.

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையால் தென்னிந்தியா முழுவதும் பயனடையும். மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.2600 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மதுரை எய்ம்ஸ் 2026 மே மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தில் திமுக 1967 முதல் ஆட்சியில் இருந்துள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பலமுறை ஆட்சியில் இருந்தாலும் எய்ம்ஸ் பற்றி யோசிக்காமல் இப்போது குறைசொல்வது சரியாக இருக்காது. தமிழக முதல்வர் குடும்பத்தினர் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் பேசியுள்ளார். அந்தப் பணத்தில் எய்ம்ஸ் கட்ட ரூ.2 ஆயிரம் கோடி கொடுத்திருந்தால் வேகமாக எய்ம்ஸ் கட்டி முடித்திருக்கலாம். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறந்திருக்கலாம். இதை செய்யாமல் கலைஞர் நூற்றாண்டு நூலகம், பேனா சிலை அமைப்பது தேவையா? திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 3.50 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை. மத்திய அரசு ஒரு ஆண்டில் 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளது.

மதுரை நெசவுத் தொழிலுக்கு புகழ்பெற்றது. நெசவாளர் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என்றனர். அதற்கு ஒரு செங்கலையாவது வைத்தார்களா? ஆனால், மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடியில் விருதுநகரில் ஜவுளி பூங்கா அறிவித்துள்ளது. இதை தேர்தல் அறிக்கையில் சொல்லாமலேயே செய்தோம்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 ஆயிரம் செவிலியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 670 பணியிடங்கள் காலியாக உள்ளது. சென்னையில் செவிலியர்கள் வேலை கேட்டு போராட்டம் நடத்துகின்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். ஆனால் டெட் தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் வேலை கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி அறிக்கையில் மட்டுமே நடைபெறுகிறது. கமிஷன், கலெக்சன், கரப்சன் நோக்கத்தில் ஆட்சி நடத்துகின்றனர்.

மதுரை எம்பி எப்போதும் பிரதமர் மோடி புராணம் பாடுகிறார். ஜூலை மாதாம் வரை 131 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். கேரளாவில் இருந்த மருத்துவ கழிவுகள் கொண்டு வரப்பட்டு தென்காசி, தேனி, கம்பத்தில் கொட்டுகின்றனர். இதற்காக மதுரை எம்பி குரல் கொடுத்தாரா? கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் ஆட்சியை அவர் தட்டிக்கேட்டாரா? கம்யூனிஸ்ட்கள் சர்ந்தர்ப்பவாதிகள். அவர்களால் அவர்களுக்கும், நாட்டிற்கும் எந்த பயனும் இல்லை. மதுரை பிரதமர் மோடியை சார்ந்த எம்பி வர வேண்டும். தமிழக மக்கள் பிரதமர் மோடியை கைவிடமாட்டார்கள் என நம்பிக்கை உள்ளது. தமிகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

Leave your comments here...