ராமலிங்கம் கொலை வழக்கு – நெல்லை முபாரக் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 24 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை..!

தமிழகம்

ராமலிங்கம் கொலை வழக்கு – நெல்லை முபாரக் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 24 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை..!

ராமலிங்கம் கொலை வழக்கு – நெல்லை முபாரக் வீடு உட்பட  தமிழகம் முழுவதும் 24 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை..!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான இவர் கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டர். இவர் அப்பகுதியில் நடைபெற்ற மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்து வந்தார்.

அது தொடர்பான மோதலிலேயே கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குறிச்சி மலையை சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அவர்கள் தனியாக வழக்கு பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு தொடரபாக மேலும் பல தகவல்களை திரட்டும் வகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதன் விவரம் வருமாறு:-திருச்சி பீமநகர் பண்டரிநாதபுரம், ஹாஜி முகமது உசேன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அப்சல் கான் என்பவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடிவந்துள்ளார். மேற்கண்ட கொலை வழக்கு தொடர்பான 2 சாட்சிகளுடன் என்.ஐ.ஏ. ஆய்வாளர் ரஞ்சித் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது செல்போன் குறுந்தகவல்கள், லேப்டாப் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் உசிலஙகுளத்தில் உள்ள ரசித் முகமது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹாஜி இப்ராஹிம் ராவுத்தர் வீதியில் உள்ள அப்பாஸ் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டிற்கு இன்று காலை வந்த 3 அதிகாரிகள், வீட்டி ற்குள் சென்று ஒவ்வொரு அறையாக பார்வையிட்டு, அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். சோதனையின் போது வீட்டில் இருந்த ரூ.90 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.சோதனையையொட்டி அவரது வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை 8.45 மணி வரை நடந்தது.

பின்னர் அப்பாசை என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி தெரிவித்து விட்டு அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், திருபுவனம், ராஜகிரி , அதிராம்பட்டினம், வடக்கு மாங்குடி, திருமங்கலக்குடி உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை நடராஜபுரம் பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டுக்கு இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர். பின்னர் கதவை பூட்டிவிட்டு சோதனையை தொடர்ந்தனர். இதற்காக வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.தொடர்ந்து அவரது வீட்டில் ஏதாவது ஆவணங்கள் உள்ளதா ? என சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேப்போல் கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரியை சேர்ந்த முகமது பாரூக், திருபுவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா, அதிராம்பட்டினம் ஆசாத் நகர் காஜாவுதீன், வடக்கு மாங்குடி புருகானுதீன் உள்பட 9 பேர் வீடுகளில் பலத்த பாதுகாப்புடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டு விசாரித்து வருகின்றனர். இந்த சோதனையில் 25-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை பேரளந்தூர் தெற்கு பட்டக்கால் தெரு நிஷார்அகமது (38) வீட்டிலும் ராமலிங்கம் கொலை வழக்கு தொட ர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விழுப்புரம்-புதுவை மெயின் ரோட்டில் உள்ள தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் பாபு. இவருக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை 6.30 மணியளவில் தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த (என்.ஐ.ஏ.) 5-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது பாபு அங்கு இல்லை. அதனால் அதிகாரிகள் அவரது தாய் மற்றும் சகோதரரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். பாபு கடந்த சில ஆண்டுகளாக கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் உள்ள ஒரு மசூதியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார் என்ற தகவல் தெரிய வந்தது. ஒரு மணி நேரம் விசாரணையை முடித்துக் கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை முபாரக் வீட்டிற்கு வந்தனர்.தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த முபாரக்கிடம் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முபாரக்கின் வீட்டு முன்பு குவிந்துள்ளனர்.

திருப்பூர் சாமுண்டிபுரம் பள்ளிவாசல் அருகே உள்ள குலாம்காதர் கார்டன் 8-வது வீதியில் உள்ள முபாரக் பாட்சா(வயது 42) என்பவரது வீட்டிற்கு இன்று காலை 5-30மணிக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் பல்வேறு அறைகளுக்கு சென்று அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.காலை 5-30மணிக்கு தொடங்கிய சோதனை 9-30 மணி வரை 4மணி நேரம் நடைபெற்றது. இதில் ஒரு லேப்டாப், ஒரு செல்போன் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.முபாரக் பாட்சா தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் பேச்சாளர். தற்போது எஸ்.டி.பி.ஐ., கட்சியில் நிர்வாகியாக உள்ளார். திருப்புவனம் பா.ம.க. நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.என்.ஐ.ஏ., சோதனையையொட்டி திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எஸ்.கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் என்ற அப்துல் ரசாக் (வயது 67). இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி. இவரது வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரி கள் வந்தனர். இன்ஸ்பெக்டர் குல்தீப்சிங் தலைமையில் அவர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.அப்துல் ரசாக் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது.

இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் உள்ளதா? எனவும் அங்கு லம் அங்குலமாக சோதனை நடத்தினர்.என்.ஐ.ஏ. சோதனையையொட்டி அப்துல் ரசாக் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்ப நாயக்கனூர் காமராஜர் நகரில் வசிக்கும் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி ஜாகீர்உசேன் என்பவரது வீட்டிலும் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave your comments here...