அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாத்துறையினர் சோதனை ஏன்..?.. விரிவாக பார்ப்போம்..!

தமிழகம்

அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாத்துறையினர் சோதனை ஏன்..?.. விரிவாக பார்ப்போம்..!

அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாத்துறையினர் சோதனை ஏன்..?.. விரிவாக பார்ப்போம்..!

சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதமசிகாமணி மீதான வழக்குள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அண்மையில் நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி.எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதே போல் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆணடு தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் பொன்முடி உள்ளிட்டோரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதற்கு என்ன காரணம் என்று சற்று வரிவாக பார்க்கலாம்.

விழுப்புரம் மாவட்டம் பூத்துரை கிராமத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2011 வரை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் போலீசார் 2012ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கௌதமசிகாமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் கௌதமசிகாமணி ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. வெளிநாடுகளில் கௌதமசிகாமணி செய்த முதலீடுகள் மற்றும் அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் ஈட்டிய தொகைகளுக்கு ஈடாக 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டு முடக்கியது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையின இன்று சோதனை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச்ச சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “மார்ச் 1-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடிய தன்னுடைய பிறந்தநாள் மேடையில் முதல்வர் ஸ்டாலின், `யார் பிரதமராக வர வேண்டும் என்பது முக்கியமல்ல, யார் பிரதமராக வரக் கூடாது என்பதே முக்கியம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அன்றிலிருந்து ஒன்றிய அரசு, ஆளுநர் மூலமாகவும் தற்போது அமலாக்கத்துறை மூலமாகவும் நெருக்கடிகளை ஏற்படுத்திவருகிறது.

பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தைத் திசைதிருப்ப அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இப்போது அவர் வீட்டைச் சோதனை செய்து நெருக்கடி கொடுக்க நினைப்பது எவ்வளவு பெரிய கூத்து என்பது எல்லோருக்கும் தெரியும். அமலாக்கத்துறைக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கிறதா என்பது பற்றியே வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதேபோல் `அமலாக்கத்துறையின் இயக்குநராக இருந்தவருக்கு கண்மூடித்தனமாகப் பதவி நீட்டிப்பு கொடுத்திருக்கிறீர்கள். இது சட்டவிரோதமானது, செல்லாது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே, இன்றைக்கு இவ்வளவு ஆர்வமும், ஆவேசமும் காட்டுகின்றவர்கள் அமலாக்கத்துறையால் போடப்பட்ட எந்த வழக்கிலாவது குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நூற்றுக்கு இரண்டு பேர்கூட இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இதேபோல்தான் கர்நாடகாவில் டி.கே.சிவகுமாரின் வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார்கள்.

அதன் பிறகு இந்தியாவிலேயே அதிகமாக ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் டி.கே.சிவகுமார் வெற்றிபெற்றார். எனவே, மோடி அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, கர்நாடகாவில் பா.ஜ.க-வுக்கு என்ன ஏற்பட்டதோ அதே நிலைதான் ஏற்படும். நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். இதையெல்லாம் காட்டி எங்களை மிரட்ட முடியாது. இன்னும் ஐந்து மாதம்தான் அவர்களின் ஆட்சி இருக்கிறது. பொன்முடி விவகாரம் அகில இந்திய பிரச்னையாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று பா.ஜ.க-வுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது. மொத்தம் 26 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றன. தி.மு.க சார்பில் முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக பெங்களூரு செல்ல அவர் சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “இந்தியாவுக்கு ஆபத்து வந்திருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காக்கவே, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை முடக்கவே மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டிருக்கிறது. அமலாக்கத்துறை சோதனையைக் கண்டு கிஞ்சித்தும் அஞ்சவில்லை. பொன்முடி மீது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. பொன்முடி சட்டப்படி அதைச் சந்திப்பார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைக் கண்டு பா.ஜ.க எரிச்சலடைந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே இந்தச் சோதனை” என்றார்.

Leave your comments here...