நூற்பாலைகளின் போராட்டத்தால் 10 நாட்களில் ரூ.300 கோடி உற்பத்தி பணிகள் பாதிப்பு..

தமிழகம்

நூற்பாலைகளின் போராட்டத்தால் 10 நாட்களில் ரூ.300 கோடி உற்பத்தி பணிகள் பாதிப்பு..

நூற்பாலைகளின் போராட்டத்தால் 10 நாட்களில் ரூ.300 கோடி உற்பத்தி பணிகள் பாதிப்பு..

தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ.300 கோடி மதிப்பிலான நூல் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஓபன் எண்ட் (ஓஇ) நூற்பாலைகளில் கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 600 ‘ஓஇ’ நூற்பாலைகள் செயல்படுகின்றன. இவற்றில் 300 நூற்பாலைகள் கலர் நூல் தயாரிப்பிலும், 300 நூற்பாலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

மின்கட்டணம் மற்றும் கழிவுப் பஞ்சு விலை உயர்வால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கடந்த 5-ம் தேதி முதல் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மறு சுழற்சி ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (ஆர்.டி.எப்) தலைவர் ஜெயபால் மற்றும் தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி ஆகியோர் கூறியதாவது:

மின்கட்டண உயர்வால் கடந்த ஓராண்டாக பல்வேறு நெருக்கடிகளை ஓபன் எண்ட் நூற்பாலை நிர்வாகத்தினர் எதிர்கொண்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் இதுவரை ரூ.300 கோடி மதிப்பிலான நூல் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இத்தொழிலில் பெரும்பாலானோர் வட மாநிலத் தொழிலாளர்கள் என்பதால் தற்காலிகமாக அவர்களுக்கு பணி இல்லாத போதும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மின் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே ஓபன் எண்ட் நூற்பாலைகள் நெருக்கடியில் இருந்து மீள வாய்ப்பு ஏற்படும். கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave your comments here...