தமிழகத்தில் ரூ.54 ஆயிரம் கோடி முதலீடு – இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு..!

தமிழகம்

தமிழகத்தில் ரூ.54 ஆயிரம் கோடி முதலீடு – இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு..!

தமிழகத்தில் ரூ.54 ஆயிரம் கோடி முதலீடு – இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு..!

தமிழகத்தில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல்வேறு திட்டங்களில், 54,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்,” என, பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான செயல் இயக்குனர் வி.சி.அசோகன் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, தமிழகம் மிக முக்கிய சந்தையாக உள்ளது. எங்கள் நிறுவனத்தால், கடந்த ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோலுடன், 10 சதவீதம் எத்தனால் சேர்க்கப்படுகிறது.வரும், 2025க்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை தயாரிக்க, அரசு ஆணைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம்.

தமிழகத்தில் இதுவரை, 26 பெட்ரோல் நிலையங்களில், ‘இ – 20’ எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது. வரும் மார்ச்சுக்குள் கூடுதலாக, 66 பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும் .தமிழகத்தில் பல்வேறு திட்டங்களில், 54,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அதில், 35,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாகையில், 1,300 ஏக்கரில் ஆண்டுக்கு, 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறனில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.அங்கு, பி.எஸ்., 4 திறனில் பெட்ரோல், டீசல், ‘பாலிபுரோப்லீன்’ உற்பத்தி செய்யப்படும்.

விழுப்புரம், ஆசனுாரில், 466 கோடி ரூபாயில் பெட்ரோல், டீசல் முனையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் வல்லுாரில், 724 கோடி ரூபாயில் ஒரு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.எண்ணுார் துறைமுகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் முனையம், 921 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. திருவள்ளூர், அம்முல்வொய்யல் கிராமத்தில், 1,398 கோடி ரூபாய் செலவில், ‘லுாப்ஸ் ஆயில்’ உற்பத்தி ஆலையும்; 4,825 கோடி ரூபாய் செலவில் எரிவாயு எடுத்துச் செல்ல, ‘பைப் லைன்’ திட்டங்களும் அமைக்கப்படும்.குழாய் வழித்தடத்தில் வீடுகள், வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வினியோகிக்கும் திட்டம், 7,570 கோடி ரூபாயிலும், புதிய பெட்ரோல் பங்க்குகள், 2,500 கோடி ரூபாயிலும் அமைக்கப்படும்.வீடுகளுக்கு குறைந்த எடையில், அதிக பாதுகாப்பு நிறைந்த, ‘காம்போசிட்’ சிலிண்டர்கள் விற்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...