துருக்கி, சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவின் பணி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது – பிரதமர் மோடி

இந்தியா

துருக்கி, சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவின் பணி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது – பிரதமர் மோடி

துருக்கி, சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவின் பணி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது – பிரதமர் மோடி

இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசிய தளம் (NPDRR) என்ற பெயரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது. 3-வது ஆண்டாக நடைபெறும் இந்த அமர்வில், இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆற்றிய பணிகளுக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்துள்ளதாகவும் இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்துள்ளது எனவும் கூறினார். பேரிடர் மேலாண்மை தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் மனிதவளத்தை இந்தியா சிறப்பாக விரிவுப்படுத்தியுள்ளது என்றும் இது நாட்டுக்கு நன்கு பயனளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் ஆரோக்கியமான போட்டிகளை ஊக்குவிக்கவும், விருதுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பேரிடர் மேலாண்மை விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

மாறும் பருவநிலைக்கு ஏற்ப உள்ளூரில் மீட்சித் தன்மையுடன் கட்டடங்களை உருவாக்குதல் என்ற இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள் இந்தியப் பாரம்பரியத்தில் நன்கு வெளிப்படுவதாக பிரதமர் கூறினார். கிணறுகள், பாரம்பரிய கட்டடக்கலைகள், பழங்கால நகரங்கள் போன்றவற்றில் இவை தெளிவாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கானத் தீர்வுகள் மற்றும் உத்திகள் உள்ளூரிலேயே உள்ளன என்றும் அவர் கூறினார்.

கட்ச் பகுதியில் நிலநடுக்கத்திலிருந்து தப்பிய வீடுகளை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வீட்டுவசதி மற்றும் நகர்புறத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உள்ளூர் தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர்ப் பொருட்களைப் பயன்படுத்துவதும் தற்போதையத் தேவை என்றும் அவர் கூறினார். எதிர்கால தொழில்நுட்பத்துடன் உள்ளூர் தன்மைகளை இணைக்கும் போது பேரிடரை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் நாம் சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்தகால வாழ்க்கை முறைகள் மிக வசதியாக இருந்தன என்று கூறிய அவர் வறட்சி, வெள்ளம், தொடர் மழை போன்ற இயற்கைப் பேரிடர்களை சமாளிப்பது குறித்து அனுபவமே நமக்கு கற்றுக் கொடுத்ததாகக் கூறினார். முந்தைய அரசுகள் பேரிடர் நிவாரணங்களை வேளாண் துறையுடன் இணைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். பூகம்பம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது அவை உள்ளூர் அளவில், உள்ளூர் உதவிகளைக் கொண்டு எதிர்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போது நாம் வசிக்கும் சிறிய உலகில் அனுபவங்களை பல்வேறு தரப்புகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்வது வழக்கமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். முன்பு கிராமங்களில் ஒரே மருத்துவர் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்ததாகவும் தற்போது ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பு மருத்துவர் உள்ளதாகவும் பிரதமர் உதாரணமாகக் கூறினார். அதேபோல இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள ஆற்றல்மிக்க அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த நூற்றாண்டின் இயற்கைப் பேரிடர்களிலிருந்து துள்ளியமான கணிப்புகளை நாம் உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பேரிடர்களை எதிர்கொள்ளும் நடைமுறைகளை தேவைக்கேற்ப நவீன முறையில் மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அடையாளம் காணுதல் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துவதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு எதிர்காலத்தில் அதனுடைத் தாக்கம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க அடையாளம் காணும் நடைமுறை உதவும் என்றும் அவர் கூறினார். இயற்கைப் பேரிடர்களின் அபாயங்களைக் குறைக்க சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பு முறைகளை மேலும் வலுவாக்கி நீண்டகால நடைமுறைகளுக்கேற்ப அவற்றை மேம்படுத்தும் அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முந்தைய காலங்களில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஏற்பட்ட புயல்களால் ஏராளமானோர் உயிரிழந்ததை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் உத்திகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களால் புயல் சேதங்களை சமாளிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கைப் பேரிடர்களை நம்மால் தடுக்க முடியாது என்று கூறிய பிரதமர் சிறந்த உத்திகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்குப் பின்பு பேரிடர் மேலாண்மை முறையாக இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட பேரிடர் மேலாண்மை தொடர்பான சட்டங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 2001-ம் ஆண்டில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் கொண்டு வந்தது குஜராத் மாநிலம் தான் என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் அப்போதைய மத்திய அரசு, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றியதாகவும் அதன் பின்னர் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது எனவும் பிரதமர் கூறினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். திட்டமிடலை முறைப்படுத்தி அதனை நிறுவனமயமாக்குவதுடன் உள்ளூர் திட்டமிடல்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். அமைப்பு முறைகளை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று கூறிய அவர் இரண்டு நிலைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். முதலாவதாக பேரிடர் மேலாண்மையில் பொதுமக்கள் பங்களிப்பை அதிகரிப்பதில் பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிலநடுக்கம், புயல், தீ விபத்து மற்றும் பிற பேரிடர் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக முறையான செயல்முறை, பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் என்றும் அவர் கூறினார். உள்ளூர் பங்களிப்பின் மூலமே வெற்றியை அடைய முடியும் என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இளைஞர் குழுக்கள் உள்ளிட்டவற்றை கிராமப்புற அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித் திட்டம், முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களின் பணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளும் வகையில் சமுதாய மையங்களில் உரிய உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இரண்டாவது நிலையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடனுக்குடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குடியிருப்புகளின் ஆயுட்காலம், கழிவுநீர் வடிகால், மின்சாரம், குடிநீருக்கான உள்கட்டமைப்பு போன்றவை தொடர்பான தகவல்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்தும் மருத்துவமனைகளில் தீயணைப்புக்குத் தேவையான தயார்நிலைக் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வரும் சூழலில் நகர்ப்புறப் பகுதிகளில் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், போன்றவற்றில் தீ விபத்துகள் அதிகரித்திருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளை வாகனங்கள் மூலம் சென்றடைவதில் உள்ள சிக்கல்கள் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர் இதற்கு தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். உயரமான கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்கும் வகையில் நமது தீயணைப்பு வீரர்களின் திறன்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் தொழிற்சாலைகளில் ஏற்படும் தீயை அணைக்க போதுமான வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

உள்ளூர் திறன்கள் மற்றும் உள்ளூர் உபகரணங்களை தொடர்ந்து நவீனப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். காடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் எரிபொருள்களை உயிரி எரிபொருள்களாக மாற்றும் உபகரணங்களை வழங்குவது மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கும் வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் அவர்களது வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதுடன், தீ விபத்துகளையும் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். எரிவாயு கசிவுகள் அதிகமுள்ள தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் சிறப்பு வல்லுநர்கள் குழுக்களை ஏற்படுத்த வேண்டியது குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.

அதேபோல் அவசரகால ஊர்திகள் தொடர்பான கட்டமைப்புகளை எதிர்காலத் தேவைக்கேற்ப உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் செயற்கை நுண்ணறிவு, 5ஜி, இணையதள சேவைக்கான உபகரண இணைப்பு ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பேரிடர்களின் போது இடிபாடுகளுக்குள் புதையுண்டவர்களை மீட்பதில் ட்ரோன்கள், எச்சரிக்கை உபகரணங்கள் மற்றும் தனிநபர் உபகரணங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். உலகளவில் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து வல்லுநர்கள் ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உலகம் முழுவதும் பேரிடர்களின் போது இந்தியா விரைந்து செயலாற்றுவதாகவும் நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய உள்கட்டமைப்புக்கான முன்முயற்சிகளை எடுத்துவருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் அபாயக் குறைப்பு உள்கட்டமைப்பு கூட்டமைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்றைய விவாதங்கள் பெரிய அளவில் ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர் எதிர்கால செயல் திட்டங்களை நோக்கி இவை வழிநடத்தும் என்றும் பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார். பாரம்பரியமும், தொழில்நுட்பமும் நமது வலிமை என்று கூறிய பிரதமர், இந்த வலிமையுடன் பேரிடர் அபாயக் குறைப்பு கட்டமைப்பில் சிறந்த மாதிரியை நாம் உருவாக்க முடியும் என்று கூறினார். இது இந்தியாவுக்கானது மட்டுமல்ல என்றும் ஒட்டுமொத்த உலகத்துக்கானது என்றும் கூறி பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

Leave your comments here...