மக்கள் நோய், நொடியின்றி வாழ இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் – மண் காப்போம்’ இயக்க கருத்தரங்கில் அரக்கோணம் எம்.எல்.ஏ வேண்டுகோள்.!

தமிழகம்

மக்கள் நோய், நொடியின்றி வாழ இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் – மண் காப்போம்’ இயக்க கருத்தரங்கில் அரக்கோணம் எம்.எல்.ஏ வேண்டுகோள்.!

மக்கள் நோய், நொடியின்றி வாழ இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் – மண் காப்போம்’ இயக்க கருத்தரங்கில் அரக்கோணம் எம்.எல்.ஏ வேண்டுகோள்.!

“மக்கள் நோய், நொடி இன்றி வாழ அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்” என ‘மண் காப்போம்’ இயக்க கருத்தரங்கில் அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி வேண்டுகோள் விடுத்தார்.

ஈஷாவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த கருத்தரங்கம் அரக்கோணத்தில் உள்ள கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (அக்.16) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி அவர்கள் விவசாயிகள் மத்தியில் பேசுகையில், “ஆரம்பத்தில் நாம் அனைவரும் இயற்கை விவசாயம் தான் செய்து கொண்டு இருந்தோம். இடையில் விளைச்சலை அதிகரிப்பதற்காக ரசாயன விவசாயத்திற்கு மாறியுள்ளோம். தற்போது மீண்டும் பழைய படி இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். காரணம், ரசாயன உரங்களின் பயன்பாட்டில் தான் B.P, சுகர் போன்ற நோய்கள் வருகின்றன. எனவே, இது போன்ற நோய், நொடிகளில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். அந்த வகையில், அரக்கோணத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக கருத்தரங்கை நடத்தும் மண் காப்போம் இயக்கத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

இக்கருத்தரங்கில் பல்வேறு முன்னோடி விவசாயிகள் பங்கேற்று தங்களின் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதன்படி, ‘மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல்’ என்ற தலைப்பில் பேசிய செய்யூர் விவசாயி பாலாஜி, “இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் வெறும் உற்பத்தி செய்வதோடு நின்றுவிடாமல், அதை மதிப்பு கூட்டி நேரடியாக விற்பனை செய்யும் போது இரு மடங்கு லாபம் எடுக்க முடியும். உதாரணத்திற்கு, தக்காளி, வெங்காயம், முருங்கை போன்றவற்றை பொடியாக மாற்றி விற்பனை செய்யலாம். பீட்ரூட், கேரட்டை மால்டாக மாற்றி விற்கலாம். இதனால், காய்கறிகள் அழுகிவிடும் என்ற பயத்தில் உடனே விற்காமல் கூடுதல் நாட்கள் வைத்திருந்து விற்க முடியும். சிறு விவசாயிகளும் இதை செய்ய முடியும். பெரிய இயந்திரங்கள் எல்லாம் தேவை இல்லை. வெறும் வீட்டில் இருக்கும் மிக்சி, கிரைண்டரே போதுமானது” என்றார்.

‘ஊடுப்பயிரில் உன்னத லாபம்’ என்ற தலைப்பில் பேசிய ‘மண் காப்போம்’ இயக்கத்தின் இயற்கை விவசாய பயிற்சியாளர் சரவணன், “காய்கறி விவசாயிகள் தங்களின் லாபத்தை அதிகரிக்க பல பயிர் சாகுபடி முறையை பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு வெண்டையை பிரதான பயிராக நட்டு அதற்கு இடையில் கொத்தமல்லி மற்றும் முள்ளங்கியை ஊடுப்பயிராக நடலாம். இவ்வாறு செய்தால் களை மற்றும் இடுப்பொருள் செலவு குறையும். 3 பயிரில் இருந்து ஏக்கருக்கு ரூ.1,98,000 லாபம் கிடைக்கும். தனிப் பயிராக நட்டால் ரூ.1 லட்சம் தான் கிடைக்கும்” என்றார்.

‘உழவில்லா வேளாண்மை’ என்ற தலைப்பில் பேசிய ‘மண் காப்போம்’ இயக்கத்தின் இயற்கை விவசாய பயிற்சியாளர் முத்துக்குமார், “பொதுவாக காய்கறி விவசாயிகள் களை எடுப்பதற்கும், உழவு ஓட்டுவதற்கும் அதிகம் செலவு செய்கின்றனர். ‘உழவில்லா வேளாண்மை’ என்ற முறையில் இயற்கை விவசாயம் செய்தால் இந்த இரண்டு செலவும் இருக்காது. பூச்சி தாக்குதலை எளிதில் கட்டுப்படுத்தலாம். இம்முறையில் குறைந்த அளவிலான இடத்திலேயே பல வகையான காய்கறிகளை விளைவிக்க முடியும். மண் வளமும் தொடர்ந்து அதிகரிக்கும். விளைச்சலும் அதிகமாக கிடைக்கும்” என்றார்.

இதேபோல், ‘தினசரி வருமானம் தரும் கீரை சாகுபடி’ என்ற தலைப்பில் பேசிய முன்னோடி விவசாயி பிரபாகர், “நான் என்னுடைய நிலத்தில் மொத்தம் 35 வகையான கீரை வகைகளை நட்டு நேரடியாக விற்பனை செய்து வருகிறேன். வேரோடு அறுவடை செய்யும் கீரை, 3 மாத கீரை, நீண்ட கால கீரை என 3 விதமான கீரைகளை கலந்து வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் நுகர்வோர்களுக்கு என்னால் கீரைகளை வழங்க முடிகிறது” என கூறினார்.

60 சென்டில் 1 லட்சம் வருவாய் ஈட்டும் கிணத்துக்கடவு விவசாயி மாரிமுத்து அவர்கள் பேசுகையில், “நான் பல பயிர் சாகுபடி முறையில் பந்தல் காய்கறிகளுடன் சேர்த்து காலிபிளவர் சாகுபடி செய்து வருகிறேன். மற்ற விவசாயிகள் இரண்டரை ஏக்கர் நிலத்தில் பயிரிடும் 5 காய்கறிகளை நான் வெறும் 60 சென்டில் பயிரிட்டுள்ளேன். 45 நாட்கள் முதல் 130 நாட்கள் வரை வெவ்வேறு பயிர்களை தொடர்ந்து அறுவடை செய்கிறேன். இதனால், இடுப்பொருள் செலவும், ஆள் செலவும் குறைந்து கூடுதல் லாபம் கிடைக்கிறது” என்றார்.

இதுதவிர, பந்தல் காய்கறிகள் சாகுபடி குறித்து ஜெகதீஷ், பூச்சி மேலாண்மை குறித்து பூச்சி செல்வம், வீட்டு தோட்டம் குறித்து உழுது உண் திரு. சுந்தர் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ‘மண் காப்போம்’ இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

Leave your comments here...