உலகப் புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட் – சென்னையில் நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

இந்தியாஉலகம்விளையாட்டு

உலகப் புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட் – சென்னையில் நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

உலகப் புகழ்பெற்ற  செஸ் ஒலிம்பியாட் – சென்னையில் நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்  மோடி..!

ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளில் பிரம்மாண்டமான தொடக்கவிழாவை பிரதமர் பிரகடனம் செய்வார். 2022 ஜூன் 19 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தி தேசிய விளையாட்டரங்கில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைமையகத்தை நோக்கி செல்வதற்கு முன் இந்த ஜோதி இந்தியாவில் 40 நாட்களுக்கும் அதிகமாக சுமார் 20,000 கி.மீ. தூரத்திற்கு 75 முக்கியமான இடங்கள் வழியாகப் பயணம் செய்து மகாபலிபுரத்திற்கு வந்து சேர்கிறது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் கௌரவம் மிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்குகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெறவுள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டன. 1924 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சதுரங்கப் போட்டிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்தது.

அதற்கு பிறகு, தனிப்பட்ட முறையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவது துவக்கப்பட்டது. அதே 1924 ஆம் ஆண்டில் பாரீசில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது, சர்வதேச சதுரங்கப் போட்டிகளுக்கான கூட்டமைப்பு ஃபிடே, முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பாரீசிலேயே நடத்தியது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அதிகாரப்பூர்வமற்றவையாகக் கருதப்பட்டன. 1927 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிகாரப்பூர்வமான சர்வதேச சதுரங்கப் போட்டிகள் லண்டனில் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போர் வரை இந்தப் போட்டிகள் முறையான இடைவெளியின்றி அவ்வப்போது நடத்தப்பட்டு வந்த போதிலும், 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெரும்பாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி முதலில் பெலாரஸில் உள்ள மின்ஸ்க்கில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அது ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு மாற்றப்பட்டது. பின்னர், உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, சர்வதேச சதுரங்க போட்டிகளின் கூட்டமைப்பு, இந்தப் போட்டிகள் இந்தியாவின் சென்னையில் நடைபெறும் என்று இறுதியாக அறிவித்தது.

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களை தவிர்த்து சென்னையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதற்கும் காரணம் உள்ளது. இந்தியாவில் சென்னையில்தான் 26 கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர். பிற மாநிலங்களில் ஒற்றை இலக்க அளவிலேயே கிராண்ட்மாஸ்டர்கள் இருக்கின்றனர். செஸ் போட்டிகளில் இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதன் காரணமாக சென்னையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக ஃபிடே அறிவித்துள்ளது.

மாமல்லபுரம் அருகே கண்கவர் விளையாட்டு அரங்குகளில் இந்த சர்வதேச செஸ் போட்டிகள் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலும் காமராஜர் சாலையில் உள்ள நேப்பியார் பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்களில் சதுரங்க அட்டையின் கருப்பு வெள்ளை நிறங்கள் வரையப்பட்டுள்ளன. செஸ் போட்டிகளின் காய்கள் வடிவிலான உருவங்களும் ஆங்காங்கே பெரிய அளவில் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. செஸ் விளையாட்டின் குதிரை காய் இந்தப் போட்டியின் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டுள்ளன. இது தம்பி என்று அழைக்கப்படுகிறது.

நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துவக்கவிழாவில் பிரதமர் மோடி இந்தப் போட்டிகளை துவக்கி வைக்கவுள்ளார். தமிழக ஆளுநர் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஆகியோர் இந்த துவக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். நாளை தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை சர்வதேச சதுரங்கப் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.

இதற்கிடையே, நாளை சென்னை வரும் பிரதமர் மோடி, நாளை மறுநாள் (ஜூலை 29) சென்னையின் பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் அவர் 69 பேருக்கு தங்கப்பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்குவார். மேலும் பட்டமளிப்பு விழா பேருரையை அவர் ஆற்றுவார்.

Leave your comments here...