கர்நாடகாவில் பாஜக நிர்வாகி படுகொலை – இறுதி ஊர்வலத்தில் வன்முறை..!

அரசியல்

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி படுகொலை – இறுதி ஊர்வலத்தில் வன்முறை..!

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி  படுகொலை – இறுதி ஊர்வலத்தில் வன்முறை..!

கர்நாடகாவில் பாஜக இளைஞரணியைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கர்நாடகாவின் தக்ஷின் கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு நேற்றிரவு தனது கறிக்கடையை மூடிவிட்டு வீடு திரும்பியபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.கேரள பதிவு எண் கொண்ட 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் பிரவீன் நெட்டாருவை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரவீன் நெட்டாருவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த படுகொலைக்கு பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளே காரணமாக இருக்ககூடும் என இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. படுகொலையை அடுத்து முழு அடைப்புப் போராட்டத்திற்கு விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது. தக்ஷின கன்னடா, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்ககளில் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வேண்டும், வேண்டும் நியாயம் வேண்டும்’ என்று கோஷமிட்டபடி சுள்ளியா, புத்தூர், கடபா டவுன் பகுதிகளில் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். மேலும் புத்தூரில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி தாக்கி உடைத்தனர்.இவ்விரு மாவட்டங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை உண்ணிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த படுகொலை குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இடம் கேரளாவுக்கு அருகில் உள்ள பகுதி என்பதால் குற்றவாளிகள் கேரளாவுக்கு தப்பி ஓடி இருக்கலாம் என கருதப்படுகிறது.சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள போலீசார், கர்நாடக காவல்துறையைச் சேர்ந்த 3 குழுக்கள் கேரளா விரைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் வந்து சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள தக்ஷின் கன்னடா மாவட்ட காவல்துறை தலைவர் ருஷிகேஷ் சோனானி, விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave your comments here...