பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்-க்கு 2-வது திருமணம் – நேரில் வாழ்த்திய அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியா

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்-க்கு 2-வது திருமணம் – நேரில் வாழ்த்திய அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்-க்கு  2-வது திருமணம் – நேரில்  வாழ்த்திய அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் 32 வயதான குர்பீரித் கவுர் என்ற மருத்துவரை இன்று திருமணம் செய்து கொண்டார். அம்மாநில தலைநகர் சண்டிகரில் உள்ள இல்லத்தில் இந்த திருமண விழா நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முன்னணி ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார்.48 வயதான பகவந்த் மான் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். முதல் திருமணத்தின் மூலம் பகவந்த் மான்னிற்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு மண முறிவு ஏற்பட்ட நிலையில், விவாகரத்தான மனைவி, அவரின் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

இந்நிலையில் தான் 32 வயது மருத்துவரான குர்பீரித்துடன் பகவந்த் மானிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குடும்ப உறவினர்கள் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளனர். இந்த விழாவில் ஆம் ஆத்மி தலைவர்களை தவிர வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சந்தா பகவந்த் மானை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதில் தாயாரின் விருப்பப்படி மீண்டும் மண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பகவந்த் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து பகவந்த் மான் முதல்முறையாக மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். இவரின் தேர்தல் வெற்றிக்கும் மனைவி குர்பிரீத் பின்னணியில் இருந்து உதவி செய்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இருவரின் உறவு நீண்ட காலமாகவே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சரான பகவந்த் மான், குர்ப்ரீத்தை மணம் முடித்து கரம் பிடித்துள்ளார்.

Leave your comments here...