மாநிலங்களவை நியமன உறுப்பினராகிறார் இசையமைப்பாளர் இளையராஜா- பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

அரசியல்இந்தியா

மாநிலங்களவை நியமன உறுப்பினராகிறார் இசையமைப்பாளர் இளையராஜா- பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

மாநிலங்களவை நியமன உறுப்பினராகிறார் இசையமைப்பாளர் இளையராஜா- பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, ‘பாகுபலி’ திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மகத்தான இசையமைப்பாளர் இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ விருதையும் பெற்றார் இளையராஜா. 5 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

இப்படியான பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இளையராஜா, மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். அப்படி இசைக்கான அவரது கலைச் சேவையை பாராட்டும் வகையில் இளையராஜா இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் மாநிலங்களவை நியமன உறுப்பினராகிறார்; ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களுக்கு கதாசரியரும், மூத்த படைப்பாளியுமான விஜயேந்திர பிரசாத் மற்றும் சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராகின்றனர்.


இந்நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யபட்டுள்ள இளையராஜாவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ”இளையராஜா என்ற படைப்பு மேதை தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அதேபோல அவரது வாழ்க்கைப்பயணமும் ஊக்கமளிக்கிறது. எளிய பின்னணியிலிருந்து வந்தவர், பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...