அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!

சமூக நலன்தமிழகம்

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா?  தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களும் பயனடையும் வகையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசு, ஓராண்டாகியும் அது குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக, 31-5-2022 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு எவ்வித ஓய்வூதியப் பயன்களையும் அளிக்காமல் அவர்களை வெறும் கையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ள அரசு தி.மு.க. அரசு.


ஓய்வூதியப் பலன்கள் எப்போது வழங்கப்படும் என்பதற்கான ஓர் உத்தரவாதத்தினைக் கூட அரசு அறிவிக்காதது ஓய்வு பெற்றவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. விடியலை நோக்கி’ என்று சொல்லி விரக்தியின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை இதுபோன்ற நம்பிக்கைத் துரோகம் தான் ‘திராவிட மாடல்’ போலும். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

கும்பகோணம் பணிமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி, பலருக்கு உதவி புரிந்து, உதவி மேலாளராக 31-05-2022 அன்று ஓய்வு பெற்ற ரமேஷ் ஓய்வு பெற்ற நாளன்று வெறும் கையுடன் வீடு சென்ற நிலையில், 1-6-2022 அன்று மன உளைச்சல் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

ஓய்வூதியப் பலன்கள் மூலம் தன் மகன் அல்லது மகளுக்கு திருமணத்தை நடத்தலாம் என்றும், உயர் கல்வி படிக்க வைக்கலாம் என்றும், ஏற்கனவே வாங்கிய வீட்டுக் கடனை அடைக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்றவர்களை வெறும் கையுடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்-அனுப்பி வைத்தது அவர்கள் மேல் இடி விழுந்தது போல் உள்ளது. அரசின் இந்தச் செயல் மூலம் மேலும் கடனாளிகளாக ஆகும் நிலைக்கு ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள் உள்ளார்கள்.

இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் ஆகும். இதன் காரணமாக ஓய்வு பெற்ற அனைவருமே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், இனி வரும் மாதங்களில் ஓய்வு பெற இருப்பவர்களும் தங்களுடைய ஓய்வூதியப் பலன்கள் எப்போது கிடைக்குமோ என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...