தமிழகத்தில் முதல்முறையாக சொகுசு கப்பலில் சுற்றுலா திட்டம் – முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்..!

தமிழகம்

தமிழகத்தில் முதல்முறையாக சொகுசு கப்பலில் சுற்றுலா திட்டம் – முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்..!

தமிழகத்தில் முதல்முறையாக சொகுசு கப்பலில் சுற்றுலா திட்டம் – முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்..!

சென்னை துறைமுகத்தில், ‘கார்டெலியா க்ரூய்சஸ்’ நிறுவனத்தின், கடல் வழி ‘எம்ப்ரெஸ்’ சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

தமிழக சுற்றுலாத் துறை, கார்டெலியா என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து, சுற்றுலா பயணியருக்கான ‘எம்ப்ரெஸ்’ சொகுசு கப்பல் சுற்றுலாவை, அறிமுகம் செய்துள்ளது. மும்பை உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில், கார்டெலியா சொகுசு கப்பல் பயணம் செய்து உள்ள நிலையில், தற்போது முதல் முறையாக, சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இக்கப்பல் 700 அடி நீளமும், 11 தளங்களையும் கொண்டுள்ளது; 1,950 பயணியர் பயணிக்கலாம்; 650க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் உள்ளனர். இக்கப்பலில், 10 உணவகங்கள், ஸ்பா, நீச்சல் குளம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், சொகுசு தங்கும் அறை, தியேட்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.சென்னையில் இருந்து புதுச்சேரி மற்றும் விசாகப்பட்டினத்திற்கு சொகுசு கப்பலில், மக்கள் பயணம் செய்யும் வகையில், இப்புதிய சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, ஆழ்கடல் வரை சென்று திரும்பும் வகையில், இரண்டு நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டணங்களை, தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும். குறைந்தபட்சம் 22 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2.5 லட்சம் ரூபாய் வரை கட்டணங்கள் உள்ளன. சென்னையில் நான்கு மாதங்கள், இச்சுற்றுலா திட்டம் அமலில் இருக்கும். வரும் 2025ம் ஆண்டுக்குள் மேலும் மூன்று கப்பல்களை இயக்க உள்ளதாக, சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ”இப்புதிய திட்டம் வாயிலாக, தமிழக சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய கனவு நனவாகியுள்ளது,” என்றார்.

இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது:கோடை விடுமுறைக்கு, குடும்பத்துடன் கோவா சென்று வந்தால் கூட, குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். இந்த சொகுசு கப்பல் பயணம், எங்களுக்கு முற்றிலும் புதிது. நான்கு பேருக்கு 70 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இதை இன்னும் குறைத்தால், நடுத்தர மக்களுக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும். அனைவருக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.’

கார்டெலியா க்ரூய்சஸ்’ சொகுசு கப்பல் சுற்றுலா நேற்று துவங்கியது. அக்கப்பலில் உள்ள வசதிகள் தான், முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. பயணத்தை துவக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு, கப்பல் கேப்டன் குரூப் தேயாஸ் நினைவு பரிசு வழங்கினார். இடம்: சென்னை துறைமுகம்.

Leave your comments here...