சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் – ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்

இந்தியா

சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் – ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்

சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்தில் அனைவரும்  பங்கெடுக்க வேண்டும் – ராஜஸ்தான் முதல்வர்  வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் அம்மாநில அரசு (ஜூன் 3) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம், ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2-வது இந்திய மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அவர்களை சத்குரு நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜஸ்தான் முதல்வர், “மண் நம்முடைய தாய். மண்ணை நாம் எப்போதுமே அன்பாகவும், மரியாதையாகவும் அணுகியுள்ளோம். மண் வளம் இழந்து வருவது பற்றி கேள்விப்படும் போது எனக்கு வேதனையாக உள்ளது. அதேசமயம், இதற்காக சத்குரு அவர்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இவ்வியக்கம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.


இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சத்குரு பதிவிட்டுள்ள பதிவில், “நமஸ்காரம், முதல்வர் அசோக் கெலாட் ஜி, மண் காப்போம் இயக்கத்திற்கான தங்களது ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். மண் வளத்தை பாதுகாக்கும் கொள்கைகளை உருவாக்கி, இந்த அழகான நிலத்தில் நீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பணியில் உங்களது தலைமையில் ராஜஸ்தான் முன்னணியில் இருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக ஜெய்ப்பூரில் நடந்த பொது நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநில பஞ்சாயத் ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேஷ் சந்த் மீனா, வேளாண் துறை அமைச்சர் லால்சந்த் கட்டாரியா மற்றும் சத்குரு கலந்து கொண்டு மண் வள மீட்பின் அவசியம் குறித்து பேசினர்.

ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேசுகையில், “இயற்கையில் நாம் பார்க்கும் அனைத்துமே மண்ணில் இருந்து வருகிறது; மீண்டும் மண்ணுக்கே திரும்ப செல்கிறது” என கூறினார். மேலும், “இந்த இயக்கம் சத்குருவுடைய தனிப்பட்ட இயக்கம் அல்ல, ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் பயன் தரும் இயக்கம். எனவே, மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் அனைவரும் பங்காற்ற வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இதற்காக உறுதி ஏற்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் லால் சந்த் கட்டாரியா, “அறிவியம் மற்றும் தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் உருவாவதற்கு பல ஆண்டுகள் முன்பாக மக்கள் இயற்கையுடன் இணைந்து அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர்” என கூறினார்.

விழாவில் சத்குரு பேசுகையில், “கடந்த 25 வருடங்களில் மட்டும் உலகின் 10 சதவீத நிலப்பரப்பு பாலைவனமாக மாறியுள்ளது. மண் அழிவு எந்தளவுக்கு வேகமாக நிகழ்ந்து வருகிறது என்பதற்கு இது உதாரணம்” என்றார். மேலும், “நம்முடைய கலாச்சாரம் மண்ணை நாம் ‘தாய் மண்’ என்றே அழைக்கிறோம். காரணம், நம்முடைய அனைத்து தாய்மார்களுக்கும் மண் தான் தாய். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் மண்ணை வளமாக வைத்து கொள்ள மரங்களின் இலை, தளைகளும் கால்நடைகளின் கழிவுகளால் மட்டுமே முடியும். 60 சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுப்பட்டு இருக்கும் நம் நாட்டில் போதிய மரங்களும், கால்நடைகளும் இருப்பது அவசியம். அடுத்த 10 முதல் 15 வருடங்களில் இந்த கால்நடைகள் எல்லாம் காணாமல் போனால், நாமும் காணாமல் போவோம். நம் தேசத்தின் கதையும் முடிந்துவிடும்” என்றார்.

வேளாண் துறை அமைச்சரும், சத்குருவும் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். ஜெய்ப்பூர் கண்காட்சி மையத்தில் நடந்த இந்த பொது நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பிரபல நாட்டுப்புற கலைஞர்கள் இல்லா அருண், குட்லே கான் மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...