பிளஸ் 2 தேர்வு முடிந்த கொண்டாட்டம் : தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவன் பலி – தந்தை போலீசில் புகார்..!

உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிந்த கொண்டாட்டம் : தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவன் பலி – தந்தை போலீசில் புகார்..!

பிளஸ் 2 தேர்வு முடிந்த கொண்டாட்டம் : தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவன் பலி – தந்தை போலீசில் புகார்..!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிப்பாளையம், மோகனன் தெருவை சேர்ந்தவர் கணேஷ்(42), தனியார் பள்ளி உரிமையாளர். இவரது மனைவி அர்ச்சனா. இவர்களது மகன்கள் திருமுருகன்(17), கோகுல்(15). இதில் பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த திருமுருகன் திடீரென உடல்நிலை பாதிப்பால் கடந்த 29ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், கணேஷ் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 24ம் தேதி எனது மகனுக்கு பிளஸ்2 இறுதி தேர்வு முடிந்தது. இதை கொண்டாடுவதற்காக எனது மகனும், நண்பர்களான நவீன், புகழ், சதீஷ் உட்பட 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சாலையில் உள்ள ஓட்டலில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது எனது மகன் பிரியாணியோடு, தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்த எனது மகன் திருமுருகனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. உடனே, ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, புட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார். முதலுதவி சிகிச்சைக்கு பின் மகனை வீட்டிற்கு அழைத்து சென்றேன். தொடர்ந்து 2 நாட்களாக எனது மகனுக்கு கடும் வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டது.

கடந்த 29ம் தேதி மயங்கிய நிலையில் இருந்த எனது மகனை, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், திருமுருகன் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சில பிரமுகர்கள் அழுத்தம் கொடுத்ததால் மகனின் உடலை எரித்துவிட்டு, இறுதி சடங்கு செய்தேன்.எனது மகன் இறப்பதற்கு அந்த ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட அசைவ உணவு மற்றும் தந்தூரி சிக்கன் தான் காரணம். எனவே, அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து, உரிமையாளரை கைது செய்ய வேண்டும். நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் ஆரணி ஆர்டிஓ கவிதா, டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோரிடமும் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்டவர்கள் உடனடியாக விசாரித்து ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். திருமுருகன் சாப்பிட்ட ஓட்டலுக்கு அருகில் ‘‘7 ஸ்டார்’’ என்ற பெயரில் இயங்கி வந்த ஓட்டலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இப்போது பிளஸ்2 மாணவன் உயிரிழந்த சம்பவம் ஆரணியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...