திருப்பதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர சோதனை – பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.!

இந்தியா

திருப்பதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர சோதனை – பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.!

திருப்பதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர சோதனை – பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.!

உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இனையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் நாள்தோறும் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு கொடுக்கும் அதே பாதுகாப்பு மலைப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கும், வனப்பகுதிகள் மாசடையாமல் இருக்கவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால், திருப்பதியில் முழு பிளாஸ்டிக் கவர் தடை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை நேற்றிலிருந்து அமலுக்கு வந்ததால் அலிபிரியில் தீவிர வாகன சோதனை நடந்தது. இதனால், 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 2018-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் தடை செய்வதாக தேவஸ்தானம் அறிவித்து படிப்படியாக தடையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கைப்பை ஆகியவற்றை தடை செய்த தேவஸ்தான நிர்வாகம், பக்தர்கள் வசதிக்காக திருமலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவி இலவசமாக “ஜல பிரசாதம்” என்ற பெயரில் குடிநீர் வழங்கி வருகிறது. லட்டு பிரசாதம் கொண்டு செல்ல டி.ஆர்.டி.ஓ. உதவியுடன் தயார் செய்யப்பட்ட மக்கும் தன்மையுடைய பைகள் மற்றும் சணல் பைகள் விற்கப்பட்டு லட்டு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், திருப்பதி மலையில் முழுமையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடைவிதித்து தேவஸ்தான நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ‘‘ஜூன் 1-ந் தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது. திருமலையில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்’’ என்று அறிவித்திருந்தது.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையில் நேற்று முதல் முழுமையாக பிளாஸ்டிக் தடை அமலானது. இதனையடுத்து, பிளாஸ்டிக் பொருட்களை திருமலைக்கு கொண்டு செல்வது தடுக்கும் பொருட்டு திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் முழுமையாக தேவஸ்தான ஊழியர்களால் தீவிர சோதனை செய்யப்பட்டது. பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உட்பட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்த பின்னரே பக்தர்களை திருமலைக்கு அனுமதிக்கின்றனர். பலத்த சோதனை காரணமாக அலிபிரி சோதனை சாவடியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதன்காரணமாக பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர். வார விடுமுறை நாட்களில் திருப்பதியில் தொடர்ந்து அதிக பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் சோதனை தொடர்ந்தால் மேலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க நேரிடும். ஆனாலும் சோதனை தொடரும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...