இந்திய அரசியல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையமாகக் கொண்டே சுழலும் – பிரசாந்த் கிஷோர்

அரசியல்

இந்திய அரசியல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையமாகக் கொண்டே சுழலும் – பிரசாந்த் கிஷோர்

இந்திய அரசியல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையமாகக் கொண்டே சுழலும்  –  பிரசாந்த் கிஷோர்

இந்திய அரசியல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையமாகக் கொண்டே சுழலும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரசாந்த் கிஷோர், இந்திய அரசியலில் வலிமையான கட்சியாக பாஜக இருப்பதாகக் குறிப்பிட்டார். தேசிய அளவில் 30 சதவீத வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சியை அவ்வளவு எளிதில் அப்புறப்படுத்திவிட முடியாது என அவர் கூறினார். அதற்காக எல்லா தேர்தல்களிலும் பாஜகதான் வெற்றி பெறும் என தான் கூறவில்லை என தெரிவித்த பிரசாந்த் கிஷோர், அடுத்த 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையமாகக் கொண்டே இந்திய அரசியல் சுழலும் என்பதே தனது கணிப்பு என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்த முதல் 40-50 வருடங்களுக்கு காங்கிரஸ் கட்சியை மையமாகக் கொண்டே இந்திய அரசியல் சுழன்றதைப் போல், அடுத்த 30 வருடங்களுக்கு பாஜகவை மையமாகக் கொண்டே சுழலும் என அவர் கூறினார்.எந்த ஒரு சித்தாந்தமும் சிகரத்தை நோக்கி சென்று பிறகு கீழேதான் இறங்கும் என்ற கோட்பாட்டை தான் ஏற்பதாகக் குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், ஆனால், பாஜக கீழே இறங்குவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இருக்காது என்பதே தனது கருத்து என குறிப்பிட்டார்.

இந்தியாவில் இதுவரை எந்த ஒரு கட்சியும் எந்த ஒரு தேர்தலிலும் 40 சதவீத வாக்குகளைப் பெற்றதில்லை என தெரிவித்த பிரசாந்த் கிஷோர், எனவே, இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் வலிமையை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றார். காங்கிரஸ் கட்சிதான் பாஜகவுக்கு தேசிய அளவிலான மாற்று என குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், அந்த கட்சி எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பாடம் கற்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி வீதிக்கு வந்து போராட வேண்டிய நேரம் இது என தெரிவித்த பிரசாந்த் கிஷோர், ஆனால், என்ன செய்தாலும் ஊடகங்களின் கவனத்தைப் பெற முடியாத போது என்னதான் செய்வது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த மனநிலையில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளிவர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் அமைப்புதான் பாஜகவின் மிகப் பெரிய பலம் என தெரிவித்த பிரசாந்த் கிஷோர், அதன் மிகப் பெரிய பலவீனம் நரேந்திர மோடியை அதிகமாக சார்ந்திருப்பதுதான் என குறிப்பிட்டார். இதேபோல், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் அதன் மிகப் பெரிய பலம் என்றும், உத்வேகம் இன்றி இருப்பது அதன் மிகப் பெரிய பலவீனம் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

தன்னை கவர்ந்த இந்திய தலைவர் மகாத்மா காந்தி என குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், உயிரோடு இருப்பவர்களில் தன்னை கவர்ந்தவர் எல்.கே. அத்வானி என கூறினார். ஏனெனில், அவர்தான் தேசிய அளவில் ஒரு கட்சியை கட்டமைத்து வளர்த்து இன்று மிகப் பெரிய சக்தியாக பாஜக திகழ காரணமாக இருப்பவர் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

Leave your comments here...