மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு – ரயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம்..!

இந்தியா

மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு – ரயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம்..!

மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு – ரயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம்..!

மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை தற்காலிகமாக நிறுத்தியதால், ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது நான்கு விதமான மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை ரத்து தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் அளிக்குமாறு விண்ணப்பித்திருந்தார். இதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: மார்ச் 2020 முதல் மார்ச் 31, 2022 வரை ரயில்களில் பயணித்த 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரயில்வே அளிக்கவில்லை. இதில் 4.46 கோடி பேர் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 2.84 கோடி பேர் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 8,310 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை தற்காலிகமாக ரத்து செய்ததால், கூடுதல் வருவாய் ரூ.1,500 கோடி உட்பட மொத்தம் ரூ.3,464 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பாலின அடிப்படையில், ஆண் பயணிகள் மூலம் ரூ.2,082 கோடி ரூபாயும், பெண் பயணிகள் மூலம் ரூ.1,381 கோடியும், ரூ.45.58 லட்சம் மூன்றாம் பாலினத்தவர் மூலமும் ரயில்வேக்கு வருவாயாக கிடைத்துள்ளது. அனைத்து வகுப்புகளிலும் மூத்த பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 40 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் 53 பிரிவினருக்கு அளிக்கும் பல்வேறு கட்டண சலுகையால் ரூ.2,000 கோடி வருவாய் இழப்பை ரயில்வே சந்தித்து வருகிறது. மூத்த குடிமக்களுக்கு பொறுத்தவரை, ரயில்வே கட்டணத்தில் 80 சதவீதம் தொகையை ரயில்வே தள்ளுபடி செய்கிறது. முன்னர் ரயில்வே, தாமாக முன்வந்து விட்டுகொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் போதிய வரவேற்பு இல்லாததால் தோல்வியில் முடிந்தது. 2019ம் ஆண்டு சி.ஏ.ஜி அறிக்கையின் படி, 4.41 கோடி மூத்த குடிமக்கள் பயணியர்களில், 7.53 லட்சம் பேர் 50 சதவீத சலுகையையும், 10.9 லட்சம் பேர் 100 சதவீத கட்டண சலுகையை விட்டுகொடுத்துள்ளனர் என அதில் குறிப்பிட்டுள்ளது.

Leave your comments here...