இலவச கழிப்பறையுடன் சென்னையில் 50 இடங்களில் காபி ஷாப் திறக்க முடிவு..!

தமிழகம்

இலவச கழிப்பறையுடன் சென்னையில் 50 இடங்களில் காபி ஷாப் திறக்க முடிவு..!

இலவச கழிப்பறையுடன் சென்னையில் 50 இடங்களில் காபி ஷாப் திறக்க முடிவு..!

அடையாறு, இந்திராநகர், எம்.ஆர்.டி.எஸ்., ரயில் நிலையம் அருகே, ராஜிவ் காந்தி சாலையில் ‘காபி ஷாப்’புடன் அமைந்த அதிநவீன இலவச கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜிவ் காந்தி சாலையில், காபி ஷாப்புடன் கூடிய அதிநவீன கழிப்பறை திறக்கப்பட்டுள்ளது. இது, உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகளின் ஓய்வறைகளுக்கு இணையாக காணப்படுகிறது.

‘லுாகேப் துாயா’ எனும் பெயரில் அழைக்கப்படும், இந்த கழிப்பறையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தலாம்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதை சேர்ந்த நிறுவனமான, இக்சோரா எப்.எம்., எனும் நிறுவனம், மதுரையை சேர்ந்த துாயா இன்னோவேஷன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, ‘லுாகேப்’ஐ துவக்கி உள்ளது.

இது குறித்து, அந்நிறுவனங்களின் நிறுவனர்களான, அபிஷேக்நாத், வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:இந்த கழிப்பறையுடன் கூடிய காபி ஷாப், கன்டெய்னரில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஆண், பெண், மாற்று திறனாளிகளுக்கு என தனித்தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்று திறனாளிகள் கழிப்பறைக்கு செல்ல ஏதுவாக, சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரெய்லிக்கான பணிகளும் நடந்து வருகின்றன. அதன் வாயிலாக பார்வையற்றவர்களும் பயன்படுத்தலாம்.பெண்களுக்கான, ‘நாப்கின்’ வழங்கும் தானியங்கி இயந்திரம் உள்ளது. அதில், 5 ரூபாய் போட்டால், ‘நாப்கின்’ வரும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் கோடை காலத்தில், இந்த கழிப்பறைகளை பயன்படுத்தும் வகையில், ஈரப்பதத்தை தண்ணீராக மாற்றுவதற்கான திட்டங்கள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஓராண்டிற்குள் சென்னை நகரில், 50 ‘லுாகேப்’கள் நிறுவப்பட உள்ளன. அதற்காக, அரசின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. விரைவில், வேளச்சேரி, பெசன்ட்நகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் ‘லுாகேப்’கள் நிறுவப்பட உள்ளன. இதற்கான இடத்தை அரசு ஒதுக்கும்.வரும், 2024ம் ஆண்டிற்குள், தமிழகம் முழுதும், 100,’லுாகேப்’கள் துவக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் கோவை, திருச்சி, மதுரை, கொடைக்கானல் ஆகிய நகரங்களில் காபி ஷாப்புடன் கூடிய கழிப்பறைகளை நிறுவ அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

இந்த கழிப்பறை பராமரிப்பிற்கான வருவாய், காபி ஷாப்பிடம் இருந்து வசூலிக்கப்படும் வாடகையில் ஒதுக்கப்படும்.இந்திரா நகரில் அமைக்கப்பட்டுள்ள, ‘லுாகேப்’ மெட்ராஸ் காபி ஹவுசுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே போல், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, பல இடங்களில் இவற்றை நிறுவ திட்டமிட்டுள்ளோம். இந்த கழிப்பறைகளில் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. அளவுக்கு மீறிய துர்நாற்றம் வீசினால், எச்சரிக்கை தகவல் அனுப்பும் வசதியும் உள்ளதால், கழிப்பறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Leave your comments here...