50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலர் கைது.!

இந்தியா

50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலர் கைது.!

50-க்கும் மேற்பட்ட  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலர் கைது.!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் கே.வி.சசிகுமார்.மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் பள்ளி ஆசிரியர் ஆவார். மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராகவும் இருந்தார். சசிகுமார் கவுன்சிலராக இருந்தது பற்றியும், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தகவலையும் சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதனை பார்த்த சசிகுமாரின் நண்பர்கள் அவருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர். இந்த நிலையில் சசிகுமாரின் முன்னாள் மாணவர் ஒருவர், அவரை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டார். அதில் சசிகுமார் ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் படித்த மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை பார்த்த பலரும் சசிகுமாரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். குறிப்பாக மாணவிகள் பலரும் சசிகுமாரால் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகுமார் விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கேரள கல்வி துறை மந்திரி சிவன்குட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது போல கட்சி அளவிலும் சசிகுமார் பற்றி விசாரிக்கப்பட்டது. இதில் அவர் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து சசிகுமார் கட்சியில் இருந்து உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் அவர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்தனர். தன்னிடம் படித்த மாணவிகள் பலரும் தனக்கு எதிராக புகார் தெரிவித்ததும், அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததையும் அறிந்த சசிகுமார் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave your comments here...