பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் வருவது சிறப்பு அம்சமாகும். கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திர தேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிப்பட பூஜை நடந்தது.

முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றத்தை காண முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வந்து சப்பரத்தில் எழுந்தருளினார். அதையடுத்து அஸ்திர தேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரளாக இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா… வீரவேல் முருகனுக்கு அரோகரா… என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ் கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புகட்டு நடைபெற்றது. பகல் 12.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் அடிவாரம் பட்டக்காரர் மடத்தில் எழுந்தருளினார். அங்கு முதல் நாள் மண்டகப்படி நடைபெற்றது.

திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணம், அடுத்த நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் உள்ளிட்ட குருக்கள்கள் செய்து வருகின்றனர்.

Leave your comments here...