நகரங்களிலும் பசுமை போக்குவரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி ..!

இந்தியா

நகரங்களிலும் பசுமை போக்குவரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி ..!

நகரங்களிலும் பசுமை போக்குவரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி ..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் புனேயின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். லோகமான்ய திலகர், சபேக்கர் சகோதரர்கள், கோபால் கணேஷ் அகார்கர், சேனாபதி பாபத், கோபால் கிருஷ்ண தேஷ்முக், ஆர்.ஜி. பண்டார்கர், மகாதேவ் கோவிந்த ரானடே ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.ராம்பாகு மால்கி மற்றும் பாபா சாகிப் புரந்தரே ஆகியோரையும் அவர் வணங்கினார்.

முன்னதாக, புனே மாநகராட்சி வளாகத்தில் சத்ரபதி சிவாஜி மகராஜின் சிலையைத் திறந்து வைத்த பிரதமர், மகத்தான வீர மன்னருக்கு மரியாதை செலுத்தினார். ‘’நம் அனைவரின் உள்ளங்களிலும் உறையும் சிவாஜி மகராஜின் இந்தச் சிலை, இளம் தலைமுறையினர் இடையே தேசப்பற்று எழுச்சியை ஏற்படுத்தும்’’ என்று அவர் கூறினார்.

புனே மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை முன்பு தாம் தொடங்கி வைத்ததை குறிப்பிட்ட பிரதமர், ‘’ புனே மெட்ரோ திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட என்னை அழைத்தது எனது பாக்கியமாகும். இப்போது அதை தொடங்கி வைக்கும் வாய்ப்பையும் நீங்கள் எனக்கு வழங்கியுள்ளீர்கள். இத்திட்டம், குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ள செய்தியை எனக்கு இது வழங்கியுள்ளது’’ என்றார். ’ ‘’கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், வாகனத் துறையில் புனே தனது அடையாளத்தை தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், புனே மக்களுக்கு நவீன வசதிகள் தேவையாக உள்ளன. புனே மக்களின் இந்த தேவையை மனதில் கொண்டு எங்கள் அரசு பணியாற்றி வருகிறது’’ என்று திரு. மோடி தெரிவித்தார்.

2014 வரை சில நகரங்களில் மட்டும் மெட்ரோ சேவை வசதி இருந்ததாக குறிப்பிட்ட பிரதமர், இன்று 24-க்கும் மேற்பட்ட நகரங்கள் மெட்ரோ ரயில் திட்ட பயனை பெற்றுள்ளது அல்லது அதன் பயன் விரைவில் கிடைக்க உள்ளதாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில், மும்பை, தானே, நாக்பூர், பிம்ப்ரி சின்ச்வாட் புனே ஆகியவை பயனடைந்துள்ளன. ‘’ இந்த மெட்ரோ புனேயில் போக்குவரத்தை எளிதாக்கும், மாசு மற்றும் நெரிசலிலிருந்து நிவாரணம் அளிக்கும், புனே மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும்’’ என்று பிரதமர் கூறினார்.மெட்ரோ மற்றும் இதர பொது போக்குவரத்து சாதனங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பது சவாலாகவும், அதேசமயம் வாய்ப்பாகவும் உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். நகரங்களில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு , துரித மக்கள் வாகன முறையே சரியான பதிலாக இருக்கும். நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில், பசுமை போக்குவரத்து, மின்சார பேருந்துகள், மின்சார கார்கள், மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அதிக அளவில் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறிய பிரதமர், மக்கள் அனைத்து போக்குவரத்துக்கும் ஒரே அட்டையைப் பயன்படுத்தும் நிலையை சுட்டிக்காட்டினார். கழிவிலிருந்து வருவாய் உருவாக்கும் கோபர்தான் திட்டம், உயிரி எரிபொருள் நிலையங்கள், எல்இடி பல்பு பயன்பாடு ஆகியவற்றைப் பட்டியலிட்டார். மேலும் அனைத்து நகரங்களிலும் பசுமை போக்குவரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறினார்.

நகரங்களின் வாழ்க்கையில் நதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய உயிர்நாடியைப் பராமரிக்க வேண்டியது அவசியம் என்றார்.நாட்டில் உள்கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சி என்னும் புதிய அணுகுமுறை வளர்ந்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், எந்த நாட்டுக்கும் நவீன உள்கட்டமைப்பு மேம்பாடு மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்டார். ‘’ துரிதமாக வளர்ச்சியடையும் இன்றைய இந்தியாவில், வேகம் மற்றும் அளவு மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் எங்கள் அரசு பிஎம் விரைவுசக்தி பெருந்திட்டத்தை தயாரித்துள்ளது’’ என்றார். நிறைவாக, ‘’நவீனத்துவத்துடன், புனேயின் பழமையான பாரம்பரியத்துக்கும், மகாராஷ்டிரத்தின் பெருமைக்கும் நகர்ப்புற திட்டமிடுதலில் சமமான இடம் அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று பிரதமர் மனநிறைவை வெளியிட்டார்.

புனேயில் நகர்ப்புற போக்குவரத்துக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் பயனாக, புனே மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. 2016 டிசம்பர் 24-ம்தேதி பிரதமர் இதற்கு அடிக்கல் நாட்டினார். 32.2 கி.மீ நீள புனே மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 கி.மீ தூரத்தை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். முழு திட்டமும் ரூ. 11,400 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கார்வாரே மெட்ரோ நிலையத்தில், கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பிரதமர், அனந்த்நகர் மெட்ரோ நிலையம் வரை ரயில் பயணம் மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் அஜீத் பவார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Leave your comments here...