உக்ரைனில் இருந்து இதுவரை 13,300 இந்தியர்கள் மீட்பு – மத்திய அரசு தகவல்

இந்தியாஉலகம்

உக்ரைனில் இருந்து இதுவரை 13,300 இந்தியர்கள் மீட்பு – மத்திய அரசு தகவல்

உக்ரைனில் இருந்து இதுவரை 13,300 இந்தியர்கள் மீட்பு – மத்திய அரசு தகவல்

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனில் இருந்து இது வரையில் 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளின் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் சூழல் காணப்படுகிறது. அவர்களுக்காக சிறப்பு விமானங்களை அந்தந்த நாடுகள் இயக்கி, மீட்டு வருகின்றன. இந்த போரால், குடிமக்களில் 752 பேர் உயிரிழந்து உள்ளனர் என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்ஷி டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனின் சுமி நகரில் உள்ள எங்களுடைய இந்திய மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அதனால், அவர்களின் பாதுகாப்புக்காக உடனடியாக ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பல வழிகளில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

இதேபோன்று, எங்களுடைய மாணவர்களையும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், முகாம்களின் உள்ளே இருக்கவும், தேவையற்ற ஆபத்து விசயங்களில் ஈடுபடாமல் தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளோம். மாணவர்களுடன், அமைச்சகமும் மற்றும் நம்முடைய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அரிந்தம் பக்ஷி செய்தியாளர்களிடம் பேசும்போது, பிசோசின் மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் இருந்து அடுத்த சில மணிநேரங்களில் ஒவ்வொருவரையும் நாங்கள் வெளியேற்ற முடியும். எனக்கு தெரிந்து, கார்கிவ்வில் இதுவரை ஒருவரும் விடுபடவில்லை. சுமியில் நாங்கள் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

தொடர்ந்து நடந்து வரும் வன்முறை மற்றும் போக்குவரத்து வசதியின்மை ஆகியவை சவாலாக நீடித்து வருகிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றே சிறந்த தீர்வாக அமையும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் 2,900 பேருடன் 15 விமானங்கள் இந்தியாவுக்கு வந்திறங்கி உள்ளன. உக்ரைனில் இருந்து இதுவரை 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டு உள்ளனர். அடுத்த 24 மணிநேரத்தில் 13 விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Leave your comments here...