சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க 2 மாத ஆண் குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேர் கைது..!
- January 24, 2022
- jananesan
- : 515
திருச்சி உறையூர் காந்திபுரம் தேவர் காலனியை சேர்ந்தவர் அப்துல்சலாம் (40). இவரது மனைவி கைருன்னிசா (36). தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் ஆன கைருன்னிசா கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரசவத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
இந்த குழந்தைக்கு முகமதுபாசில் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். கூலித்தொழிலாளியான அப்துல்சலாம், சரிவர வேலைக்கு செல்லாமல் அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாடி வந்தார். இதனால் அதிகளவில் கடனாளி ஆனார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தனர். உடன் சூதாடிய தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ஆரோக்கியராஜூம் கொடுத்த கடனை கேட்டு வந்தார்.
இந்நிலையில் அப்துல்சலாமிடம், வாங்கிய கடனை கொடுக்க வேண்டாம். மேலும், ரூ.80 ஆயிரம் தருகிறேன், உனக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். தற்போது மேலும் ஒரு குழந்தை உள்ளதால் கஷ்டப்படுகிறாய். எனவே அந்த குழந்தையை என்னிடம் கொடுத்துவிடு. நான் குழந்தையை உறவினரிடம் கொடுத்து நன்றாக வளர்க்க கூறுகிறேன் என அவர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இது குறித்து அப்துல்சலாம் தனது மனைவியிடம் கூறி அவரின் மனதை மாற்றினார்.
இதையடுத்து கடந்த 19ம் தேதி குழந்தையை ஆரோக்கியராஜிடம் விற்றுவிட்டனர். குழந்தையை பெற்ற ஆரோக்கியராஜ், இவரின் சகலையான பஞ்சப்பூரை சேர்ந்த பொன்னர் என்பவரின் தம்பி முசிறியை சேர்ந்த சந்தானமூர்த்தியிடம் கொடுத்து வளர்க்க கூறினார்.
இதற்கிடையில் கைருன்னிசா தனது குழந்தையை மீண்டும் தன்னிடமே வாங்கி கொடுத்துவிடும்படி கணவரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து கைருன்னிசா, இதுகுறித்து உறையூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி புரோக்கராக செயல்பட்ட ஆரோக்கியராஜ், இவரது உறவினர்கள் பொன்னர், சந்தானமூர்த்தி ஆகியோரை நேற்று கைது செய்து குழந்தையை மீட்டு தாய் கைருன்னிசாவிடம் ஒப்படைத்தனர்.
Leave your comments here...