‘ஏர் – இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதில் எந்த ஒளிவு மறைவும் நடக்கவில்லை – மத்திய அரசு

இந்தியா

‘ஏர் – இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதில் எந்த ஒளிவு மறைவும் நடக்கவில்லை – மத்திய அரசு

‘ஏர் – இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதில் எந்த ஒளிவு மறைவும் நடக்கவில்லை – மத்திய அரசு

ஏர் – இந்தியா’ விமான போக்குவரத்து நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘ஏர் – இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதில் எந்த ஒளிவு மறைவும் நடக்கவில்லை’ என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனமாக இருந்த ஏர் – இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ‘டாடா’ நிறுவனத்துக்கு மத்திய அரசு விற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விற்பனையை ரத்து செய்ய கோரியும், டில்லி உயர் நீதிமன்றத்தில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:ஏர் – இந்தியாவை மத்திய அரசு விற்றது தன்னிச்சையானது. எவ்வித ஆலோசனையும்நடத்தாமல் விற்றுள்ளது.

இந்த தேச விரோத செயலை அனுமதிக்க கூடாது. விற்பனை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏர் – இந்தியா விற்பனை நடவடிக்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:ஏர் – இந்தியா விற்கப்பட்டதில் எந்த ஒளிவு மறைவும் நடக்கவில்லை. ‘டெண்டர்’ பகிரங்கமாக கோரப்பட்டு, ஏலமும் வெளிப்படையாக நடத்தப்பட்டது.பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கருத்து கேட்கப்பட்ட பின்பே ஏர் – இந்தியாவை விற்க முடிவு செய்யப்பட்டது. விற்பனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதற்கான காரணங்கள் எதுவும் ஆதாரத்துடன் கூறப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து விசாரணை 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave your comments here...