தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து சட்டம் நிறைவேற்ற வேண்டும் – திமுகவிற்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

அரசியல்

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து சட்டம் நிறைவேற்ற வேண்டும் – திமுகவிற்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து சட்டம் நிறைவேற்ற வேண்டும் – திமுகவிற்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அதனை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தை பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசால் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுப் பையில், முதல்வர் ஸ்டாலின் இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த 2022ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் ஏப்.,14ம் தேதி தமிழ் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் புத்தாண்டு விஷயத்தில் தமிழக அரசு இருவிதமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவற்றில் எதை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக் கொள்வது என தெரியவில்லை. இதை அரசு தான் தீர்க்க வேண்டும்.

பா.ம.க.,வை பொறுத்தவரை தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்கு ஆயிரமாயிரம் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. 1921ம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களும், சான்றோர்களும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தனர். அதன்பின்னர், 1939ம் ஆண்டு திருச்சியில் நடந்த அனைத்திந்திய தமிழர்கள் மாநாட்டிலும் அறிவிக்கப்பட்டது. தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது.

கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அகற்றப்பட்ட நிலையில், அதை மீண்டும் கொண்டு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய அரசுக்கு உள்ளது. தை திங்கள் பிறக்க இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள்ளாக புதிய சட்டத்தை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

எனவே, தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், தை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து அவசர சட்டத்தை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பரிசு தொகுப்பு பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என அச்சிடப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது. தி.மு.க அரசு மறைமுகமாக தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பிய நிலையில், தை 1-ம் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவது தொடர்பான தி.மு.க கொள்கை முடிவிற்கு ஆதரவளிப்பது போல் பாமக ராமதாஸின் இந்த அறிக்கை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்

Leave your comments here...