68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா நிறுவனத்தின் வசம் செல்கிறது ‘ஏர் இந்தியா’..!

இந்தியா

68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா நிறுவனத்தின் வசம் செல்கிறது ‘ஏர் இந்தியா’..!

68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா நிறுவனத்தின் வசம் செல்கிறது ‘ஏர் இந்தியா’..!

ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது.

கோவிட் தொற்று சூழலுக்கு பின்பு கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது.இதற்கு செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.

இந்த நிலையில் டாடா குழுமம் அளித்த ஏல விவரங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா தனியார்மயமானதை மத்திய அமைச்சர்கள் குழு உறுதி செய்ததாக மத்திய அரசு செயலர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. கடந்த 1953-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. தற்போது ரூ. 70,000 கோடி நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்திடமே செல்வது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...