கோவை விமானப்படை பெண் அதிகாரி மீதான பாலியல் வன்கொடுமை புகாரை விமானப் படையே விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம்

கோவை விமானப்படை பெண் அதிகாரி மீதான பாலியல் வன்கொடுமை புகாரை விமானப் படையே விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு..!

கோவை விமானப்படை பெண் அதிகாரி மீதான பாலியல் வன்கொடுமை புகாரை விமானப் படையே விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு..!

கோவையில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில், லெப்டினண்ட் அமிதேஷ் ஹர்முக் என்ற அதிகாரி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, விமானப்படை பெண் அதிகாரி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

தான் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக, விங் கமாண்டரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், அப்போது, பெண் விங் கமாண்டர் ஒருவர், தனது நற்பெயர் மற்றும் தனது குடும்பத்தின் நற்பெயர் குறித்து சிந்திக்க வேண்டும் என அறிவுரை கூறியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட விமானப்படை அதிகாரியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, விமானப் படை அதிகாரி மீது, மாநில காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிதேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விமானப்படை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டுள்ள லெப்டினண்ட் அமிர்தேஷை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்தனர். அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மாநில காவல்துறையே வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தற்போது இந்த வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய விமானப்படை தளபதிக்கு, மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை உறுதி செய்ய, தடை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையை விமானப்படை மருத்துவர்கள் செய்ததாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள மகளிர் ஆணையம், விமானப்படை அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது என்றும், அறிவியல் முறையில் தவறானது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை விமானப்படை அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர். விமானப்படை அதிகாரிகள் விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால், மாநில காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி கோரியிருந்த நிலையில், ராணுவ நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...