தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவில் முதல் கட்டணம் உயர்வு.!

தமிழகம்

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவில் முதல் கட்டணம் உயர்வு.!

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவில் முதல் கட்டணம் உயர்வு.!

தமிழகத்தில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

அதற்கு பின், 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் 8-10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளிலும் இன்று நள்ளிரவுக்கு பின், சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்தாண்டு செப்.1ம் தேதி 21 சுங்க சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் இந்தாண்டு 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதனால் திருச்சி சமயபுரம் சுங்கசாவடி, திருப்பராய்த்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி   மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உள்பட 24 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. கரூர் வேலஞ்செட்டியூர் டோல்பூத்தில் கார், ஜீப், வேன், இலகு ரக வாகனங்களுக்கு ஒருமுறை பயண கட்டணம் ரூ.5  உயர்த்தப்பட்டு ரூ.90லிருந்து ரூ.95ஆகவும், பலமுறை பயண கட்டணம் ரூ.10  உயர்த்தப்பட்டு ரூ.130லிருந்து ரூ.140ஆகவும், மாதாந்திர கட்டணம்  ரூ.2625லிருந்து 2835ஆகவும் உயர்ந்துள்ளது.

இதேபோல் பேருந்து மற்றும் டிரக்  ஒருமுறை  கட்டணம் ரூ.305லிருந்து 330, பலமுறை  கட்டணம் 460 லிருந்து 495,   மாதந்தாந்திர கட்டணம் ரூ.9195லிருந்து 9920ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மணவாசி  டோல்பூத்தில்  கார், வேன், இலகுரக ஒருமுறை பயண கட்டணம் ரூ.80ல் இருந்து  ரூ.85, பலமுறை கட்டனம் ரூ.120ல் இருந்து 125, மாதாந்திர கட்டணம்  2415லிருந்து 2490ஆகவும், பேருந்து, டிரக்குக்கு ரூ.160லிருந்து 165ஆகவும்,  பலமுறை கட்டணம் 240ல் இருந்து 250ஆகவும், ஒரு மாதத்துக்கு பலமுறை கட்டணம்  ரூ.4830ல் இருந்து 4975ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம்  டோல்பூத்தில் கார், வேன்  ஒரு முறை கட்டணம் ரூ.45லிருந்து 70 ஆகவும்,  இலகுரக வாகனங்கள் 80ல் இருந்து ரூ.125ஆகவும், டாரஸ், பஸ் கட்டணம் 165ல்  இருந்து ரூ.245, கன்ெடய்னருக்கு 265ல் இருந்து ரூ.395ஆகவும் கட்டணம்  உயர்கிறது. கார், ஜீப்புக்கு வருட கட்டணம் ரூ.1400, இலகு ரக வாகனங்களுக்கு  ரூ.2450, பஸ், லாரிகளுக்கு 4905 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப்புக்கு ஒருமுறை கட்டணம்  ரூ.55 ஆகவும், பலமுறை கட்டணமாக ரூ.85ம், மாத கட்டணமாக ரூ.1,710ம்  உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இலகுரக வாகனங்கள் ஒரு முறைக்கு ரூ.100, பல  முறைக்கு ரூ.150ம் உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனத்திற்கு  ஒரு முறை ரூ.320, பல முறைக்கு ரூ.480 உயர்த்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே  உள்ள கட்டணங்களை விட தற்போது ரூ.5 முதல் ரூ.20 வரையில் கட்டண உயர்வு  செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு, பல்வேறு கட்சிகள், ஆம்னி பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி, கட்டண உயர்வை சுங்கச்சாவடி நிர்வாகங்கள் நடை முறைப்படுத்த உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave your comments here...