அரசு வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் – மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கடிதம்
- August 28, 2021
- jananesan
- : 734
அரசு வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.
காலியாகிக்கொண்டிருக்கும் எரிபொருள் வளம், ஏறிக்கொண்டிருக்கும் எரிபொருட்களின் விலை, மாசுபட்டுக்கொண்டே இருக்கும் சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக உலகளவில் மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் காற்று மாசுபடுதலைக் கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும். பெட்ரோல், டீசல் போன்ற புதுப்பிக்க முடியாத எரிபொருள் பயன்பாட்டிலிருந்து, புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலுக்கு மாறுவதற்கான நல்ல வழிமுறை இது என்பது மேலை நாடுகளில் நிரூபணமாகியிருக்கிறது.
இந்தியாவில் இதற்கான முயற்சிகள் முன்பே தொடங்கிவிட்டன என்றாலும், 2019 -ம் ஆண்டில் இருந்து வேகமெடுக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ஸ்கூட்டர் ரக இரு சக்கர வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கார்களும் விற்பனையாகி வருகின்றன.
இந்தநிலையில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்றக்கோரி மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ‘‘இத்தகைய நடவடிக்கை பொது மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். அதோடு மக்கள் மின்வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தொடங்கியுள்ள ‘மின் எரிபொருளுக்கு’ மாறும் பிரச்சாரத்த்தின் பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...