போலீசார் தாக்கியதில் வியாபாரி முருகேசன் உயிரிழப்பு: கைது செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்.!

தமிழகம்

போலீசார் தாக்கியதில் வியாபாரி முருகேசன் உயிரிழப்பு: கைது செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்.!

போலீசார் தாக்கியதில் வியாபாரி முருகேசன் உயிரிழப்பு: கைது செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்.!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இடையபட்டி- வாழப்பாடி சாலையில் மளிகை மற்றும் பழக்கடை நடத்தி வந்தார். மது அருந்தும் பழக்கம் உடைய இவர், நேற்று தனது நண்பர்கள் இரண்டு பேருடன், கருமாந்துறை வழியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்தினர். பின்னர் கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் போலீசார், முருகேசனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, உடன் வந்த நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம், முருகேசனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்நிலை இன்று மோசமடைந்ததால், இன்று (ஜூன் 23) அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேசன் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பெரியசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மாவட்ட எஸ்பி.,யும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.உயிரிழந்த முருகேசன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். தாக்குதல் நடத்திய போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகேசன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் வரை, உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுகையில், ‛போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஏற்பாடு செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என பேசினார். இதற்கு விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், ‛விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ எனக் கூறினார்

Leave your comments here...