ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை – விளக்கம் அளித்த டசால்ட் நிறுவனம்

இந்தியாஉலகம்

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை – விளக்கம் அளித்த டசால்ட் நிறுவனம்

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை – விளக்கம் அளித்த டசால்ட் நிறுவனம்

பிரான்சிடம் இருந்து இந்திய விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது. அதற்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் 2012-ல் 126 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஒப்பந்தம் முடிவாகவில்லை.

அந்த பேச்சுவார்த்தையில் 18 விமானங்களை பறக்கும் நிலையிலும், மீதம் 108 விமானங்களை இந்திய பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிப்பது எனவும் முடிவு செய்திருந்தனர்.

பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு 36 ரபேல் விமானங்களை மட்டும் முழுமையான திறனுடன் பறக்கும் நிலையில் வாங்க ஒப்பந்தம் போட்டது. இதன் விலை 126 விமானங்களுக்கு பேசப்பட்ட விலையை விட அதிகம் எனவும், அதனால் ஊழல் நடந்திருக்கிறது எனவும் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரச்னையை கிளப்பினார்.

விமானங்களை வழங்க எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு டசால்ட் நிறுவனத்தை விட 2.7 மடங்கு வேலை ஆட்கள் நேரம் அதிகம் தேவைப்படுவதால், பிரான்ஸ் நிறுவனிடமே ஒப்பந்தம் போட்டதாக அரசு விளக்கமளித்தது. சி.ஏ.ஜி.,யும் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் காணப்படவில்லை என்றது. இப்பிரச்னை ஓராண்டாக ஓய்ந்திருந்த நிலையில், பிரான்ஸ் ஊடகம் ஒன்று, டசால்ட் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த ஆயுத இடைத் தரகர் சுஷேன் குப்தாவின் நிறுவனமொன்றிற்கு பரிசு என்ற வகையில் ரூ.4.31 கோடி வழங்கியதாக கூறியது.

இந்நிலையில், ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை என்று டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது

இதுதொடர்பாக டசால்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “2000 களின் முற்பகுதியில் இருந்து, டசால்ட் ஏவியேஷன் ஊழலைத் தடுக்க கடுமையான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. தொழில்துறை மற்றும் வணிக உறவுகளில் நிறுவனத்தின் நேர்மை, நெறிமுறைகள் மற்றும் நற்பெயருக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஊழல், செல்வாக்குகளை பயன்படுத்துவதை தடுப்பதற்கும் தனது அமைப்பை பலப்படுத்தியுள்ளது. 36 ரபேல் விமானங்களை கையகப்படுத்த இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் இரண்டு அரசுகளுக்கு இடையிலானது.

இந்த ஒப்பந்தம் மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தம் அனைத்தும் விதிமுறைகளை பூர்த்தி செய்கின்றன. அரசு மற்றும் தொழில் கூட்டாளிகளிடையே முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுகின்றன. குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...