அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் – 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

அரசியல்

அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் – 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் – 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

அசாமில் நேற்று 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 39 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் கரீம்கஞ்ச் மாவட்டம் கனிசெயில் பகுதியில் வெள்ளை நிற பொலிரோ காரில் வாக்கு இயந்திரம் இருப்பதை கண்டனர். இந்த நிலையில், அசாமின் ரதாபரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 149- இந்திரா எம்.வி பள்ளியில் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு இயந்திரங்களை கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்துச்செல்ல பாஜக வேட்பாளரின் காரை தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

டிரைவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து டுவிட்டரில் பதிவிட, அது நாடு முழுவதும் பரவியது. வாக்கு இயந்திரத்துடன் மக்கள் சிறைப்பிடித்த வாகனம் பாஜ., தலைவர் கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமானது என கூறுகின்றனர்.

சிட்டிங் எம்.எல்.ஏ.,வான கிருஷ்ணேந்து பாலு, தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். தனது வேட்புமனுவில் AS 10B 0022 பதிவு எண் கொண்ட பொலிரோ கார் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதனை வைத்து பொது மக்கள் சிறைப்பிடித்த கார் அவருடையது தான் என தேர்தல் ஆணையம் உறுதிச்செய்தது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அசாம் தலைமை தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கை கேட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

பெயர் குறிப்பிட்டாமல் ஊடகங்களிடம் பேசிய தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்குச்சாவடியிலிருந்து வாக்கு இயந்திரத்தை கொண்டு வரும் போது கார் பழுதானது. அதனால் இந்த காரில் லிப்ட் கேட்டு சென்றதாகவும், பின்னர் தான் அது பா.ஜ.க., வேட்பாளருக்கு சொந்தமானது என தெரியவந்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பாஜகவை கடுமையாக சாடிய எதிர்க்கட்சிகள், இந்த சம்பவம் ”வாக்கு இயந்திரத்தை கைப்பற்றுதல்” என விமர்சித்துள்ளது. அசாமில் பாஜக வெல்ல இது மட்டுமே வழி எனவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் கோகாய் சாடியுள்ளார்.மேலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

Leave your comments here...